பக்கம் எண் :

1504.

     மன்னுங் கருணை வழிவிழியார்
          மதுர மொழியார் ஒற்றிநகர்த்
     துன்னும் அவர்தந் திருமுன்போய்ச்
          சுகங்காள் நின்று சொல்லீரோ
     மின்னுந் தேவர் திருமுடிமேல்
          விளங்குஞ் சடையைக் கண்டவள்தன்
     பின்னுஞ் சடையை அவிழ்த்தொன்றும்
          பேசாள் எம்மைப் பிரிந்தென்றே.

உரை:

      மிக்க அருளொழுகும் கண்களை யுடையவரும் இனிமையான சொற்களைப் பேசுபவரும் திருவொற்றியூர் நகர்க்கண் கோயில் கொண்டருளுபவருமாகிய சிவபெருமான் திருமுன்பு சென்று, கிளிகளே, தேவரீருடைய மின்னுகின்ற திருமுடியில் ஒளிவிளங்கும் சடையைக் கண்டவுடன், தான் முடிந்திருந்த பின்னற்சடையை முடியவிழ்த்துத் தொங்கவிட்டுக் கொண்டு, உம்மைப் பிரிந்திருக்கும் வருத்தத்தால் ஒன்றும் பேசாதிருக்கின்றாள் என்று சொல்வீர்களா? எ.று.

     மன் - மிகுதி குறித்தது. அருள் பெருகி யொழுகும் கண்ணுடையவராதலின், “கருணை வழிவிழியார்” என்கின்றார். “கருணை நிறைந்தகம் புறமும் துளும்பிவழிந் துயிர்க்கெல்லாம் களைகண் ஆகித் தெருள்நிறைந்த இன்பநிலை வளர்க்கின்ற கண்ணுடையோய்” (மகாதேவ) என வள்ளற் பெருமானார் பிறிதோரிடத்தும் கூறுவது காண்க. மதுரம் - இனிமை. துன்னுதல் - ஈண்டுக் கோயில் கொண்டருளுதல் மேற்று. சுகம் - கிளி. திருமுடி மேல் விளங்கும் மின்னுஞ் சடையென இயைக்க. தேவர் : அண்மை விளி. “மின்னியலும் வார்சடை யெம்பெருமான் கண்டாய்” (மழபா) என நாவுக்கரசர் கூறுவர். தன்பால் இரங்கி யருளாமைக்குப்பிணங்கிய உள்ளத் தளாய்த்தாயர் முடித்த தன்வார்சடையை அவிழ்த்துத் தனது தனிமை புலப்படத் தாழ விரித்துக் கொண்டாள் என்பாள், “மின்னுஞ் சடையைக் கண்டவுடன் பின்னுஞ் சடையை யவிழ்த்து” என்றும், அவல மிகுதியால் வாய் வாளா திருந்தாள் என்றற்கு, “உம்மைப் பிரிந்து ஒன்றும் பேசாள்” என்றும் உரைக்கின்றார். “சுகங்காள் உம்மைப் பிரிந்து ஒன்றும் பேசாள் என்று சொல்லீரோ?” என்று வினை முடிவுசெய்க.

     (2)