1506. மாய மொழியார்க் கறிவரியார்
வண்கை உடையார் மறைமணக்கும்
தூய மொழியார் ஒற்றியிற்போய்ச்
சுகங்காள் நின்று சொல்லீரோ
நேய மொழியாள் பந்தாடாள்
நில்லாள் வாச நீராடாள்
ஏய மொழியாள் பாலனமும் ஏலாள்
உம்மை எண்ணி என்றே.
உரை: பொய் பேசுபவர்களால் இத்தன்மையுடையவர் என்று அறிய முடியாதவரும், கொடுப்பதில் வளமான கையையுடையவரும், மறையின் ஓசை கலக்கும் தூய சொற்களைப் பேசுபவருமாகிய தியாகேசருடைய திருவொற்றியூர்க்குப் போய்க் கிளிகளே, அன்பு மொழிகளைப் பேசுவதின்றியும். பந்தாடுதலைக் கைவிட்டும், நறுமணங் கலந்த நீராடாமலும், பொருந்துமாறு உரையாடாமலும், பாற்சோறு உண்ணாமலும் உம்மையே நினைந்துகொண்டு கிடக்கின்றாள் என்று சொல்லுவீர்களா? எ.று.
மாய மொழியார் - பொய்யும் வஞ்சனையும் கலந்த சொற்களைப் பேசுபவர்; அவர்கள் உணர்வும் அத்தன்மையை யுடையதாகலின் அதனால் அறியப்படானாதலால், தியாகப் பெருமானை, “மாய மொழியார்க்கு அறிவரியார்” என்று கூறுகின்றார். 'மாயம் ஒழியார்க்கு' எனப் பிரித்தலுமொன்று. அன்பராயினார்க்கு வேண்டுவன வேண்டியாங்கு வழங்குவதுபற்றி “வண்கை யுடையார்” எனவும், அறவோர் மறைப் பொருளை இனிதுரைக்கும் இயல்பினனாதலால், “மறைமணக்கும் தூய மொழியார்” எனவும் சொல்லுகின்றார். “வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்” (மறைக்) என நாவுக்கரசரும், “அறநெறி மறையொடும் அருளிய பரன்” (மிழலை) என ஞானசம்பந்தரும் உரைப்பது அறிக. சுகங்காள் - கிளிகளே. எங்கட்குத் தலைவியாகிய நங்கை நின்பாற் கொண்ட காதலன்பு மாறாதவள் என்பீராக என்பாளாய், “நேயம் ஒழியாள்” எனவும், ஆயினும், வேட்கை கைம்மிக்கதனால் பந்தாடுவதின்றியும், ஓரிடத்தில் நிற்பதின்றியும், மணமிக்க நீராடுவதை விடுத்தும், பேசுவோர்க்குப் பொருந்திய சொற்களை வழங்காமலும் இருக்கின்றாள் என்பீராக என்பாள், “பந்தாடாள் நில்லாள் வாச நீராடாள் ஏயமொழியாள்” எனவும், இவற்றைச் செய்யாதொழியினும், வயிற்றுக்குப் பாற்சோறு உண்ணுவதையும் விட்டொழித்தாள் என்பார் “பால் அனமும் ஏலாள்” எனவும், அவளுடைய எண்ணமெல்லாம் உமது அருளின் கண்ணே ஒன்றியுளது என்க என்பாள் “உம்மை எண்ணி” எனவும், இங்குமங்கும் திரிந்தலையாமல் அவருடைய திருமுன்பு பணிவுடன் நின்று சொல்லுமின் என்பாள் “நின்று சொல்லீரோ” எனவும் உரைக்கின்றாள். நின்று, சொல்லீரோ என வினை முடிவு செய்க. (4)
|