பக்கம் எண் :

1511.

     மாண்காத் தளிர்க்கும் ஒற்றியினார்
          வான மகளிர் மங்கலப்பொன்
     நாண்காத் தளித்தார் அவர்முன்போய்
          நாராய் நின்று நவிற்றுதியோ
     பூண்காத் தனியாள் புலம்பிநின்றாள்
          புரண்டாள் அயன்மால் ஆதியராம்
     சேண்காத் தளிப்போர் தேற்றுகினும்
          தேறாள் மனது திறன்என்றே.

உரை:

      மாண்புடைய பூங்காக்கள் தளிர்த்துச் சிறக்கும் திருவொற்றியூரை யுடையவரும், தேவ மகளிர் மங்கல நாணைக் காப்பாற்றியவருமாகிய தியாகப்பெருமான் திருமுன் சென்று நின்று. இந்த நங்கை அணிதற்குரியவற்றை அணியாமல் தனிமை நினைவு கொண்டு தரையிற் புரண்டு வருந்துகிறாள்; திருமால் பிரமன் முதலிய தேவர்கள் வந்து தேறுதல் மொழிந்தாலும் மனம் தெளியா நிலையளாய் உள்ளாள் என்று, நாரையே நீ சொல்லுவாயா? எ.று.

     பூங்காக்கள் காட்சிக்கும் தங்கிப் பொழுது போக்கற்கும் அழகுற அமைக்கப்படுபவையாதலின் “மாண்கா” என்றும், உரிய காலங்களில் உரமிட்டுக் களைபோக்கித் தெளிநீர் பாய்ச்சப்படுதலால் கெடாது தளிர்த்தலும் உடைமை பற்றித் “தளிர்க்கும்” என்றும் புகழ்ந்துரைக்கின்றார். மாண்காத் தளிக்கும் என்று பாடமாயின், 'மாண்புடைய நன்மக்களின் மாண்புக்கு ஊறு நேராதவாறு காத்துதவும் ஒற்றியூர்த் தியாகப் பெருமான்' எனப் பொருள் உரைத்துக் கொள்க. அசுரர்களால் தாக்குண்டபோது தேவர் பலர் அவர்தம் மகளிர் மங்கலமிழந்து கைம்மை மகளிராம் கையறவு எய்தியபோது, தேவரைக் காத்தளித்த செயலால், மகளிர்க்கும் தீங்கு நேராதொழிந்தமை பற்றி, “வான மகளிர் மங்கலப் பொன்னாண் காத்தளித்தார்” எனப் பாராட்டுகின்றார். வலிய ஆண்கட்கு உயிருதவி செய்தார் என்பதிலும், மெல்லிய மகளிர்க்கு மங்கல வாழ்வளித்தாரென்பது சிறந்து தோன்றுவது பற்றி, “வான மகளிர் மங்கலப் பொன்னாண் காத்தளித்தளித்தார்” என்பது இன்பம் தருவதொன்று. வானவர் மகளிர்க்கு மங்கல வின்ப வாழ்வு நல்கியதுபோல, இந்நங்கைக்கும் இன்ப வாழ்வு நல்க வேண்டுமென்பது குறிப்பு. இளமை மகளிர்க்கு மங்கலமாய்க் காட்சிக்கு இன்பம் தருவனவாய் அணிகள் பல வுளவாயினும், அவற்றைத்தாமும் இவள் நீக்கி விட்டாள் என்றற்கு, “பூண்காத் தளியாள் புலம்பி நின்றாள்” என்றும், தரையில் கிடந்து தன் மெய்யெலாம் புழுதிபடியச் செய்து கொள்ளுகிறாள் என்றற்குப் “புரண்டாள்” என்றும், அவளது மனத்திண்மை தேவர் போந்து தேற்றினும் தேறாத் தன்மையுடையதாம் எனற்கு, “அயன் மால் ஆதியராம் சேண்காத்தளிப்போர் தேற்றுகினும் தேறாள்” என்றும் சொல்லுமாறு உரைக்கின்றாள். மண்ணுலகையே யன்றித் தேவருலகத்தையும் காவல் புரிபவர் இத் தேவர்கள் என வற்புறுத்த வேண்டிச் “சேண்காத் தளிப்போர்” என்று தெரிவிக்கின்றார். 'நாராய், அவர் முன் போய் நின்று, என்று நவிற்றுதியோ' என வினை முடிவு செய்க.

     (9)