1514. தகைசேர் ஒற்றித் தலத்தமர்ந்தார்
தரியார் புரங்கள் தழலாக்க
நகைசேர்ந் தவரை மாலையிட்ட
நாளே முதல்இந் நாள்அளவும்
பகைசேர் மதன்பூச் சூடல்அன்றிப்
பதப்பூச் சூடப் பார்த்தறியேன்
குகைசேர் இருட்பூங் குழலாய்என்
குறையே எவர்க்குக் கூறுவனே.
உரை: குகையிடத்துப் படியும் இருள் போன்ற பூவணிந்த கூந்தலையுடைய தோழி, இயற்கை யழகு பொருந்திய திருவொற்றியூர் என்ற தலத்தின்கண் விரும்பி யெழுந்தருளியவரும், பகைவருடைய மதில் மூன்றையும் நகைத் தெரித் தழித்தவருமாகிய சிவபெருமானை, நான் மணந்து மாலையிட்ட அந்நாள் முதல் இன்று வரையும், காமப் பகையைச் செய்யும் காமவேள் எறியும் அம்பு மலர்களையே சூடிக் கொண்டு வருந்துவதன்றி; நான் கண்டு, அவர் திருவடி மலரைத் தலையிற் சூடி யறியேன். எனது இக்குறையை நினக்கல்லது வேறே எவரிடம் கூறுவேன், காண். எ.று.
குகைகளில் ஒளி நுழையும் சாளரங்களின்மையின், காரிருள் படிதல் இயல்பாதலால், “குகைசேர் இருட் குழலாய்” எனவும், கரிய கூந்தலில் நிறமும் மணமுமுடைய பூக்களை யணிந்திருக்குமாறு விளங்கப் “பூங்குழலாய்” எனவும் புகல்கின்றாள். தகை - இயற்கை யழகு. நெய்தற் கானலும் மருதவளமும் பொருந்தினமையின் “தகை சேர் ஒற்றித் தலம்” எனப் புகழ்கின்றார். தரிபுரர் - திரிபுரத் தசுரராகிய பகைவர். புரங்கள் - இரும்பு, வெள்ளி, பொன்னாகிய மூன்றாலும் செய்யப்பட்ட மதில்கள். முப்புரங்களைத் தமது முறுவற் குறுநகையிற் பிறந்த தீயால் எரித்துச் சாம்பராக்கினாரெனப் புராணம் கூறுதலால், “தரியார் புரங்கள் தழலாக்க நகை சேர்ந்தவர்” என உரைக்கின்றாள். “மாலை யிட்ட நாள்” என்றது மனத்தின்கண் அன்புற்று சிவனது திருவருளுருவை நெஞ்சில் நிறுத்திக் கொண்ட நாள் என்னும் கருத்துத் தோன்ற நின்றது. மக்கள் தேவர் முதலாயினாருள்ளத்தில் காமவேட்கையை எழுப்பி நோயுறுவித்தலின், காமவேளைப் “பகைசேர் மதன்” என்றும், கரும்பு வில் கொண்டு மலர்களாகிய அம்பினை எய்து காமவேட்கையை உறுவித்தலை, “மதன் பூச்சூடல்” என்றும் இயம்புகிறாள். பதப் பூ - திருவடியாகிய தாமரை மலர். அப்பொழுது மலர்ந்த புதுப்பூவும் பதப்பூ எனப்படுமென அறிக. கண்காணத் திருவடியிற் பணிந்து அதனை என் தலையிற் கொண்டேனில்லை என்பாள், “பதப் பூச் சூடப் பார்த்தறியேன்” எனப் பகர்கின்றாள். நேரிற் கண்ணாரக் கண்டு வணங்கி, அவர் திருவடியை என் தலையிற் கொண்டிலேன் என்பதாம். (2)
|