பக்கம் எண் :

1518.

     துடிசேர் கரத்தார் ஒற்றியில்வாழ்
          சோதி வெண்ணீற் றழகர் அவர்
     கடிசேர்ந் தென்னை மாலையிட்ட
          கடனே அன்றி மற்றவரால்
     பிடிசேர் நடைநேர் பெண்களைப்போல்
          பின்னை யாதும் பெற்றறியேன்
     கொடிநேர் இடையாய் என்னடிஎன்
          குறையை எவர்க்குக் கூறுவனே.

உரை:

      கொடி போன்ற இடையையுடைய தோழி, துடியை ஏந்திய கையை யுடையவரும், திருவொற்றியூரில் கோயில் கொண்டுள்ள ஒளி திகழும் திருவெண்ணீறு பூசிய அழகருமாகிய சிவபெருமான், மணம் புரிந்து என்னை மாலையிட்ட கடனைச் செய்தாரே யன்றி, அவர்பால் பெண் யானையின் நடையையுடைய ஏனைப் பெண்களைப்போல, பின்னர் யான் ஒரு சுகமும் பெற்றேனில்லை; இதனை என்னென்பது? எனது இக் குறையை எவர்க்குச் சொல்லுவேன்? எ.று.

      துடி - உடுக்கை. மகளிரது நுண்ணிய இடைக்கு மின்னற் கொடியையும் பூங்கொடியையும் உவமம் கூறுவது மரபாதலால், “கொடி நேர் இடையாய்” என வுரைக்கின்றாள். வெண்ணிறத் திருநீற்றுக்கு ஒளி யுண்மையின், “சோதி வெண்ணீற் றழகர்” எனப் புகல்கின்றார். “பொங்கொளி வெண்திருநீறு” (மங்கை) எனச் சேக்கிழார் பெருமான் கூறுவது காண்க. கடி - திருமணம். கடன் - கடமையாகச் செய்யும் செயல். பிடி - பெண் யானை. மகளிர் நடைக்குப் பெண் யானை நடையை உவமம் செய்தல் நூலோர் வழக்கு. மணம் செய்து கொள்ளும் மகளிர் கணவனொடு கூடி யின்புறுவது போலத் தான் சிவனொடு கூடிச் சிவபோகம் பெறாமையைக் கூறுகின்றாளாதலின், “பெண்களைப் போல் பின்னை யாதும் பெற்றறியேன்” எனவும், திருமணத்துக்குப் பின்னையல்லது கூட்ட மின்மையின், “பின்னை யாதும் பெற்றறியேன்” எனவும் கூறுகின்றாள். பிறர்க்குரைக்கலாகாத அருமையுடைய செய்தியாதலால், “என் குறையை எவர்க்குக் கூறுவனே” என வருந்துகிறாள். சிவபோகம் பெறாமை கூறுவது இதன் கருத்து.

     (6)