பக்கம் எண் :

152.

    ஐயனே நினையன்றி யெங்கணும்
    பொய்யனேற் கொரு புகலிலாமையால்
    வெய்யனே னென வெறுத்து விட்டிடேல்
    மெய்யனே திருத் தணிகை வேலனே.

உரை:

     மெய்ப் பொருளாய் திருத்தணிகையில் எழுந்தருளும் வேலவனே, ஐயனே, நின்னையன்றிப் பொய் யொழுக்கத்தவனாகிய எனக்கு வேறு புகலிடம் இல்லாமை பற்றி வெவ்விய கொடியவன் என வெறுப்புற்றுக் கைவிட வேண்டா, எ. று.

     மெய்ப்பொருளாகிய ஞான மூர்த்தி யென்பது தோன்ற, “மெய்யன்” என்றும், மென்மைப் பண்பால் மிக்கது பற்றி “ஐயன்” என்றும் கூறுகின்றார். நிலையாத வுடம்பும் பொய் சொல்லும் வாயும் உடையவ னென்றற்குப் “பொய்யனேன்” என்று தம்மை இகழ்ந்து பேசுகிறார். பொய்யை நயந்து பொய் யொழுக்க முடையாரை ஆதரிப்பார் மண்ணிலும் விண்ணிலும் இல்லை என்பார், “பொய்யனேற்கொரு புகல் இலாமையால்” என்றும், உலகத்தாரால் புறக்கணிக்கப் பட்டாரைத் தேவரும் வெறுத்து விலக்குவராதலால் “வெய்யனேனென வெறுத்து விட்டிடேல்” என்றும் உரைக்கின்றார்.

     இதனால் என் பொய்ம்மைத் தன்மை பற்றி எனக்குப் புகலிடமில்லாமை நோக்கிக் கைவிட வேண்டா என முறையிட்டவாறு.

     (2)