1545. அந்தார் அணியும் செஞ்சடையார்
அடையார் புரமூன் றவைஅனலின்
உந்தா நின்ற வெண்ணகையார்
ஒற்றித் தியாகர் பவனிஇங்கு
வந்தார் என்றார் அந்தோநான்
மகிழ்ந்து காண வருமுன்னம்
மந்தா கினிபோல் மனம்என்னை
வஞ்சித் தவர்முன் சென்றதுவே.
உரை: அழகிய மாலையணிந்த சிவந்த சடையையுடையவரும், பகைவர்களாகிய அசுரர்களின் மதில் மூன்றையும் நெருப்பில் வெந்து விடக் குறுநகை செய்தவரும், திருவொற்றியூரில் எழுந்தருளுபவருமான தியாகப் பெருமான், இங்கு நம் வீதியில் திருவுலா வந்தார் என்று அயல் மகளிர் சொன்னாராக, ஐயோ! நான் மகிழ்வோடு அதனைக் காண வரு முன்பே கங்கை வெள்ளம்போல் பெருகி என்னை யறியாமல் என் மனம் அவர் திருமுன் சென்று சேர்ந்தது காண். எ.று.
தார் - கொன்றை மாலை. “வண்ண மார்பில் தாருங் கொன்றை” (புறம்) என்பர் சான்றோர். வான மின்னுப் போல் சிவந்த ஒளி திகழ்வதாகலின் “செஞ்சடை” என்று சிறப்பிக்கின்றாள். அன்பு கொண்டு திருவடியை யடையாமல் பகை கொண்டு வேறுபட்டவராதலின், திரிபுரத்தசுரரை “அடையார்” என்று குறிக்கின்றாள். புரம் - மதில். இரும்பு, பொன், வெள்ளி ஆகிய மூன்றாலுமாகிய மதில்களாதலின், “புரம் மூன்று” என்று கூறுகின்றாள்; முற்றும்மை விகாரத்தால் தொக்கது. அசுரர் புரங்களை நோக்கி முறுவலித்த மாத்திரையே தீ யெழுந்து அப்புரங்களைச் சூழ்ந்து எரித்தழித்தமையால், இறைவன் புன்முறுவலை “அனலின் உந்தா நின்ற வெண்ணகையார்” என்று புகழ்கின்றாள். திருவுலாவின்கண் காணப்பட்ட சிவபெருமானது புன்சிரிப்பு அடையார் புரத்து எரித்த அவருடைய செயலை நினைப்பித்தமையின் இதனைக் கூறுகின்றாள். திருவுலாக் காட்சி இளமகளிர் உள்ளத்தில் இன்பத்தைச் செய்தலின், அதனை வீதியில் வரக்கண்ட ஏனை மகளிர் அவளுக்குத் தெரிவித்து உடன் வந்து காண அழைப்பாராதலை “தியாகர் பவனி இங்கு வந்தார் என்றார்” என எடுத்துரைக்கின்றாள். காட்சி யாசை நங்கை உள்ளத் தெழுதலும் மகிழ்ச்சி மீதூர்ந்து வீதிக்கு வருமுன் மனத்தின்கண் நினைவு தோன்றிப் பெருவேட்கையை அவள்பால் எழுப்பியமை தோன்ற “அந்தோ நான் மகிழ்ந்து காண வருமுன்னம் மனம் அவர் முன் சென்றது” என்று கையறவு படுகின்றாள். மனத்தின் வேகத்தைப் புலப்படுத்த “மந்தாகினிபோல்” என்றும், அந்தக் காட்சி மகிழ்ச்சியில் உணர்விழந்தமை தோன்ற “மனம் என்னை வஞ்சித்து அவர் முன் சென்றது” என்றும் விளம்புகிறாள். (2)
|