1546. பொன்னேர் சடையார் கீள்உடையார்
பூவை தனைஓர் புடைஉடையார்
தென்னேர் பொழில்சூழ் ஒற்றியூர்த்
திகழுந் தியாகர் திருப்பவனி
இன்னே வந்தார் என்றார்நான்
எழுந்தேன் நான்அங் கெழுவதற்கு
முன்னே மனம்என் தனைவிடுத்து
முந்தி அவர்முன் சென்றதுவே.
உரை: பொன் போன்ற சடையையுடையவரும், இடையில் கீளுடை யணிந்தவரும், பூவை போன்ற உமாதேவியை ஒரு பாகத்தே யுடையவரும், அழகு பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருவொற்றியூரின்கண் எழுந்தருளுபவருமாகிய தியாகப்பெருமான், இப்பொழுது திருவுலா வந்து விட்டார் என்று அயல் மகளிர் சொன்னவுடன், நான் திருவுலாக் காண எழுந்தேனாக, நான் எழுவதற்கு முன்பே என் மனம் முந்திக் கொண்டு, என்னின் நீங்கி, அவர் திருமுன் சென்று சேர்ந்தது காண். எ.று.
பொன்னின் நிறமும் சிவபெருமான் சடை நிறமும் ஒத்து விளங்குதல் தோன்ற “பொன்னே சடையார்” என்று கூறுகிறாள். உடையினின்று கிழித்து எடுத்து அரைஞாணாக இடையில் அணியப்படுவது 'கீளுடை'யாகும். “சடையும் பிறையும் சாம்பற் பூச்சும் கீளுடையும் கொண்ட உருவம் என்கொலோ” (கோலக்கா) என ஞானசம்பந்தர் நவில்வது காண்க. பூவை - நாகணவாய்ப் புள்; காயம்பூவுமாம்; ஈண்டு ஆகு பெயராய் உமாதேவியைக் குறிக்கிறது. புடை என்றது, இடப்பாகத்தின் மேற்று. “இன்னே வந்தார் என்றார்” என்றாள். கண்டு வந்த மகளிர் திருவுலா வரவின் விரைவு புலப்பட இன்னே வந்தார் என்றமையின், அதனையே கொண்டெடுத்து மொழிகின்றாள். விரைந்து செல்லும் குறிப்பு விளங்க “நான் எழுந்தேன்” எனவுரைக்கின்றாள். மெய்யால் வீதிக்குச் சென்று புறக்கண்களால் திருலாவைக் காண்டற்குமுன் மனக்கண்ணில் தோன்றினமையின், “நான் இங்கெழுவதற்கு முன்னே மனம் என்றனை விடுத்து முந்தி அவர் முன் சென்றது” என்று மொழிகின்றாள். முந்துதல் - முற்படுதல். (3)
|