பக்கம் எண் :

1549.

     சால மாலும் மேலும்இடந்
          தாலும் அறியாத் தழல்உருவார்
     சேலும் புனலும் சூழ்ஒற்றித்
          திகழுந் தியாகப் பெருமானார்
     பாலுந் தேனுங் கலந்ததெனப்
          பவனி வந்தார் என்றனர்யான்
     மேலுங் கேட்கு முன்னமனம்
          விட்டங் கவர்முன் சென்றதுவே.

உரை:

      பிரமனும் திருமாலும் மிகவும் முறையே மேல் நோக்கி வானில் பறந்தாலும் கீழ் நோக்கி நிலத்தை அகழ்ந்தாலும், முடியும் அடியும் அறிய முடியாத நெருப்புருவாகியவரும், சேல் மீன்கள் வாழும் பொய்கைகள் சூழ்ந்த திருவொற்றியூரில் விளக்கம் பெறும் தியாகப் பெருமானுமாகிய சிவபிரான் பாலும் தேனும் கலந்தாற் போன்ற இன்பம் தரும் திருவுலா வந்தார் என்று அயல் மகளிர் கூறினாராக, அவர் உலாக் காட்சி நலத்தை நான் மேலும் கேட்டறிதற்குள், என் மனம் என்னை விட்டு நீங்கி அவர் திருமுன் சென்று சேர்ந்தது காண். எ.று.

      நெருப்புருவாய் நின்ற சிவமூர்த்தியின் திருமுடியைக் காணப் பிரமன் புள்ளுருக் கொண்டு வானில் நெடிது பறந்து முயன்றும், திருமால் திருவடியைக் காணப் பன்றியுருக் கொண்டு நிலத்தை ஆழ அகழ்ந்து நோக்கியும் முடிவு காணமாட்டாது ஒழிந்த அருமை புலப்பட “சால மாலும் மேலும் இடந்தாலும் அறியாத் தழலுருவார்” என்று கூறிகிறாள். பிரமன், திருமால் இருவருள் திருமாலைக் கூறினமையின் பிரமன் வரலாறு வருவித்துக் கொள்ளப்பட்டது. சேலும் புனலும் என எண்ணிக் கூறினாராயினும் சேல்மீன்கள் மிக்கு வாழும் புனற் பொய்கைகள் என்பது கருத்தாகக் கொள்க. பவனியின் இனிமைச் சுவையைப் புலப்படுத்தற்கு “பாலும் தேனும் கலந்ததெனப் பவனி வந்தார்” என்று அயலவர் கூறுகின்றனர். இனிமைச் சுவை தன் மனத்தை இன்புறுத்தினமையின் அதுபற்றி உள்ளத்தில் ஆர்வமெழுந்து சிறந்தமை விளங்க “மேலும் கேட்கு முன்னம்” என்று கிளக்கின்றாள்.

     (6)