1553. சூலப் படையார் பூதங்கள்
சுற்றும் படையார் துதிப்பவர்தம்
சீலப் பதியார் திருஒற்றித்
திகழும் தியாகப் பெருமானார்
நீலக் களத்தார் திருப்பவனி
நேர்ந்தார் என்றார் அதுகாண்பான்
சாலப் பசித்தார் போல்மனந்தான்
தாவி அவர்முன் சென்றதுவே.
உரை: சூலமாகிய படையை யுடையவரும், பூதகணங்களாகிய படை வீரர்களைத் தம்மைச் சூழ வுடையவரும், துதித்தேத்தும் மெய்யன்பர்கள் இருக்கும் திருப்பதியாம் சிறப்புடைய திருவொற்றியூரின்கண் எழுந்தருளி விளங்கும் தியாகப் பெருமானுமாகிய சிவபிரான், நீல நிறம் படைத்த திருக்கழுத்தோடு கூடிய திருமேனி சிறக்கத் திருவுலா வருகின்றார் என்று மகளிர் உரைத்தாராக, அதனைக் காண விரும்பி, மிகவும் பசித்தவர் விரைவதுபோல என் மனம் தாவிச் சென்று அவர் திருமுன் படைந்தது, காண். எ.று.
சூலப்படை - மூவிலை வேல் எனவும் வழங்கும். பூதம் - பூத கணம்; “பூதவினப் படை சூழ நின்று ஆடுவர்” (தரும) என ஞானசம்பந்தர் கூறுவர். நாளும் வணங்கி வழிபடும் நல்லொழுக்க முடைய மெய்யன்பர்கள் வாழும் இடம் எனச் சிறப்பித்தற்கு, “துதிப்பவர்தம் சீலப்பதியார் திருவொற்றி” எனப் புகழ்கின்றாள். களம் - கழுத்து. பொன் மேனியில் நீலமணி பதித்தது போல் அழகு செய்தலால், “நீலக்களத்தார்” என விதந்துரைக்கின்றாள். மிகவும் பசித்தவர் அதனைப் போக்கற்கு விரைவதுபோல் மிக்க ஆர்வத்தால் மனம் துள்ளிச் சென்றமை தோன்றச் “சாலப் பசித்தார் போல மனம் தாவிச் சென்றது” எனச் சாற்றுகின்றாள். (10)
|