பக்கம் எண் :

81. சல்லாப வியன்மொழி

திருவொற்றியூர்

    அஃதாவது, இங்கிதக் குறிப்பும் சிலேடையும் விரவ நிகழ்த்தும் உரையாடல். சல்லாபம் - உரையாடல். குறிப்பும் வெளிப்படையும் கலந்து இயலுவது பற்றி, இது சல்லாப இயன்மொழி எனப்படுகிறது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1554.

     காது நடந்த கண்மடவாள்
          கடிமா மனைக்குக் கால்வருந்தத்
     தூது நடந்த பெரியவர்சிற்
          சுகத்தா ரொற்றித் தொன்னகரார்
     வாது நடந்தான் செய்கின்றார்
          மாது நடந்து வாவென்றார்
     போது நடந்த தென்றேனெப்
          போது நடந்த தென்றாரே.

உரை:

      தோழி, காதளவும் நீண்ட கண்களையுடைய மடந்தையாகிய பரவையார் திருமனைக்குத் திருவடி நோவத் தூதனாகி நடந்தருளிய பெருமையை யுடையவரும், ஞானவின்பச் சொல்வராகிய திருவொற்றியூராகிய பழமைவாய்ந்த நகர்க்குத் தலைவருமாகிய சிவபெருமான், வாதம் பொருந்திய செய்கையை யுடையவராகின்றார்; எங்ஙன மெனில், பெண்ணே, என் பின் நடந்து வருக என்று எனக்குச் சொன்னாராக, நான் பொழுது போயிற்றே என்று கூறினேன்; எந்தப் பொழுது போயிற்று என வுரைக்கின்றார்; அவர் கருத்தை என்னென்பது? எ.று.

     கண் பெரிதாக இருப்பது மகளிர்க்கு அழகு தருதலின், கண்பெருமை புகழ்தற்குச் சான்றோர் 'காதளவு நீண்ட கண்கள்' என வுரைப்பது பற்றி, “காது நடந்த கண்மடவாள்” என்று திருவாரூர்ப் பரவையாரைச் சிறப்பாக நினைப்பிக்கின்றாள். மடவாள் - மடந்தைப் பருவத்து நங்கை; ஈண்டுத் திருவாரூரில் நம்பியாரூரை மணந்து வாழ்ந்த பரவையார் மேற்று. நம்பியாரூரர் பொருட்டுப் பரவையாரின் ஊடலைத் தணிக்க இறைவன் நள்ளிரவில் திருவாரூர்த் தெருவில் தூது நடந்த நிகழ்ச்சி இங்கே குறிக்கப்படுகிறது. பரவையாரின் செல்வமனை, “கடி மாமனை” எனக் கூறப்படுகிறது. கடி - காவல்; சிறப்புமாம். தூது சென்ற பெருமானது அருமை தோற்றுவித்தற்குக் “கால் வருந்தத் தூது நடந்த பெரியவர்” எனப் புகல்கின்றார். எல்லாப் பெருமைகளையும் உடையவராதலின், சிவனைப் “பெரியவர்” எனவும், சிவஞானப் பேரின்ப வாழ்வினராதல் பற்றிச் “சிற்சுகத்தார்” எனவும் இசைக்கின்றார். திருவொற்றியூரில் சங்கிலியாரைப் புணர்த்தற்காக நம்பியாரூரர் பொருட்டுத் திருவொற்றியூரிற் சிவபிரான் தூது நடந்ததுண்டெனினும், திருவாரூரிற் பரவையார் பிணக்குத்தீரப் பன்முறையும் நடந்தருளிய தூது சிவனது பெருமைக்கு ஏற்றம் தருவது என அறிக. தொன்னகர் - பழமையான நகரம். ஆயிரத்து முந்நூறாண்டுகட்கு முன்னே பெருமை மிக்குப் பிறங்கிய தாகலின், திருவொற்றியூரைத் “தொன்னக” ரென்றது பொருத்தமாகும். காளியின் சினம் அடங்க வாத நடனம் புரிந்த வரலாறும் நினைவுறுமாறு, “வாது நடம்தான் செய்கின்றார்” எனக் கூறுகிறாள். வாது - வாதம்; பிடிவாதம் செய்கின்றார் என்றுமாம். மாது: அன்புடைய பெண்; இஃது அண்மை விளி. “நடந்து வா” என்றது என் பின்பு தொடர்ந்து வருக என்று குறித்ததாகக் கொண்டு, பொழுது கழிந்த தாகலின், நான் எங்ஙனம் வருவேன் என்ற கருத்துப்பட, “போது நடந்தது என்றேன்” என வுரைக்கின்றாள். அக் கூற்றை, முன்று ஒருகால் இவ்வாறு கூட்டம் நடந்தது என்றதாக இங்கிதப் பொருள் கொண்டு, அஃது எப்போது நடந்தது என வினவுவாராய், “எப்போது நடந்தது என்றார்” என்று எடுத்துரைக்கின்றாள்.

      இதுவும், இனி வருவனவும் காமக்கூட்டம் கண்ணிய சல்லாபம்.

     (1)