1555. கச்சை யிடுவார் படவரவைக்
கண்மூன் றுடையார் வாதத்தில்
பச்சையிடுவா ரொற்றி யுள்ளார்
பரிந்தென் மனையிற் பலிக்குற்றார்
இச்சை யிடுவா ருண்டியென்றா
ருண்டே னென்றே னெனக்கின்று
பிச்சை யிடுவா யென்றார்நான்
பிச்சை யடுவே னென்றேனே.
உரை: படம் விரிக்கும் பாம்பை இடையிற் கச்சையாக அணிபவரும், கண்கள் மூன்றுடையவரும், இடப்பாகத்தில் பச்சை நிற உமையம்மையை யுடையவரும், திருவொற்றி யூரவருமாகிய சிவ பெருமான், என் வீட்டுக்கு ஆர்வமுற்றுத் தாமாகவே பலிவேண்டி வலிய வந்து, அன்பு செய்வாராய், வேண்டுவது உண்டி என்றாராக, நீ உண்க என்பது கருத்தாகக் கொண்டு, நான் உண்டாயிற்று என்பேனாய், உண்டேனென்றேன்; அதற்கு மாறாக, எனக்குப் பிச்சையிடுக என்று கேட்டார்; காதலின்பம் கருத்தாகப் பொருள்கொண்டு, வேட்கையைக் கெடுப்பேன் என்று புலப்பட, “பிச்சை அடுவேன்” என்றேன். எ.று.
உடுப்பது தோலாடையாதலின், நெகிழாமல் இறுகி நிற்கும் பொருட்டுச் சிவபிரான் பாம்பைக் கச்சாக அணிகின்றாராதலின், “கச்சையிடுவார் பட அரவை” என்று கூறிகின்றாள். வாமம் - இடப்பாகம். இடப் பாகத்துறையும் உமையம்மையின் மேனி பச்சை நிறமாகலின் “வாமத்திற் பச்சை யிடுவார்” எனப் பகிர்கின்றாள். பலி வேண்டி மனைக்கு வந்தவர் ஆர்வம் மிகவுடையராய்த் தோன்றினார் என்றற்குப் “பரிந்து என் மனைக்குப் பலிக்குற்றார்” என்று பகர்கின்றாள். ஆர்வச் சுவை நிலவ உரையாடற்கு இது காரணமாயிற்றென்பது குறிப்பு. “இச்சை யிடுவார் உண்டி” என்பது, அன்புடன் தருவார் தருவதே உண்டியாம் என்றும் பொருள் படுவது காண்க. உண்டி: நீ யுண்ணெனும் முன்னிலை யொருமை யேவல்; உண்பொருள் எனப் பெயருமாம். உண்டி யென்றதை ஏவல் வினையாகக் கொண்டமையின், நங்கை “உண்டேன்” என்றாள் என அறிக. பிச்சை - பலியாக ஏற்கும் அரிசி முதலிய பொருள்; இரண்டனுரு பேற்ற பிச்சு என்னும் பெயர்ச்சொல்லாகக் கொண்டு, பிச்சினைப் போக்குவேன் என்ற கருத்தில் “பிச்சையடுவேன்” என்கிறாள். பிச்சு - காதற் காமப் பித்து; பித்து, பிச்சென வந்ததாம்; வித்து என வருவதுபோல. “விச்சுக் கேடு பொய்க் காகாது” (சதக) என்பது திருவாசகம். (2)
|