பக்கம் எண் :

1563.

     சொல்லா லியன்ற தொடைபுனைவார்
          தூயா ரொற்றித் தொன்னகரார்
     அல்லா லியன்ற மனத்தார்பா
          லணுகா ரென்றென் மனைபுகுந்தார்
     வல்லா லியன்ற முலையென்றார்
          வல்லார் நீரென் றேனுன்சொற்
     கல்லா லியன்ற தென்றார்முன்
          கல்லா லியன்ற தென்றேனே.

உரை:

      சொற்களாலாகிய பாமாலைகளைச் சான்றோர்களால் புனைந்து தொழப்படுபவரும், நின்மலரும், திருவொற்றியூராகிய பழமையான நகரின்கண் எழுந்தருள்பவரும், இருள் சூழ்ந்த நெஞ்சினை உடைய தீயவரிடத்துச் சேராதவருமாகிய தியாகப்பெருமான், என் மனைக்குள் போந்தவர் வல்லென்னும் சூதாடு கருவிகள் போன்றவை நின் முலைகள் என்று சொன்னாராக, வல்லார் தேவரீரே என்று நான் சொன்னேன்; பின்னாலவர் உனது சொல் கல் போன்றது என்றாராக, முன்பொருகால் கல்லாலின் கீழ் ஞானவுரை நும்மால் அருளப்பட்டது என்று மொழிந்தேன். எ.று.

      சொல்லா லியன்ற தொடை - சொற்களாலாகிய திருஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள் தொடுத்தணிந்த பாமாலை. இது 'சொன்மாலை' எனவும் வழங்கும். இயல்பாகவே. மலத்தொடர்பில்லாத தூய பரம்பொருள் ஆதலின், “தூயார்” என்று சொல்லுகின்றாள். அல் - இருள். அல்லாலியன்ற மனத்தார் - அறியாமையாகிய இருள்படிந்த மனத்தை யுடையவர். அவர்கள் தீ நினைவும், தீமொழியும், தீச்செயலும் உடையவராதலின், அவர்கள் உள்ளத்தில் இறைவன் தங்கான் என்பது பற்றி “அணுகார்” என்று கூறுகிறாள். வல் போன்ற முலையை “வல்லார் முலை” என்கிறார். வல்லெனத் தலைவர் கூறினமையில் அச்சொல்லடியாக “வல்லார் நீரென” மாற்றம் பகர்கின்றாள். வல்லார் - எல்லாம் வல்லவர். உன் சொல் ஈரமும், இரக்கமும் இல்லாதது என்றற்கு உன் சொல் கல்லாலியன்றது எனத் தியாகப் பெருமான் சொன்னதற்குக் “கல்” லென்னும் சொல்லயடியாகப் பிறந்த கல்லால் நிழலின் கீழ் நால்வருக்கு அறமுரைத்த வரலாற்றுக் குறிப்பை எடுத்துக் “கல்லா லியன்றது என்றேன்” என மொழிகின்றாள்.

     (10)