பக்கம் எண் :

1571.

     சடையில் தரித்தார் ஒருத்திதனைத்
          தழுவி மகிழ்மற் றொருபெண்ணைப்
     புடையில் தரித்தார் மகளே நீ
          போனால் எங்கே தரிப்பாரோ
     கடையில் தரித்த விடம்அதனைக்
          களத்தில் தரித்தார் கரித்தோலை
     இடையில் தரித்தார் ஒற்றியூர்
          இருந்தார் இருந்தார் என்னுள்ளத்தே.

உரை:

      விலக்குதற் கமைந்த கடல் விடத்தை கழுத்தில் கொண்டவரும், யானைத்தோலை இடையில் அணிபவரும், திருவொற்றியூரின்கண் எழுந்தருள்பவரும், என் மனத்தின்கண் உறைபவருமாகிய தியாகப் பெருமான், கங்கையாகிய ஒரு பெண்ணைத் தமது சடைமுடியிலும், தழுவி இன்புறுதற்கென ஒரு பெண்ணாகிய உமாதேவியை இடப்பக்கத்திலும் கொண்டுள்ளாராதலால், மகளே, நீ அவர்பாற் சென்றால் உன்னை அவர் எங்கே வைத்துக் கொள்வார்? எ.று.

     யாவராலும் விரும்பப்படாமல் புறங்கடையில் எறியப்படும் இயல்புடையதாதலின், “கடையில் தரித்த விடம்” எனக் குறிக்கின்றார். கடையில் தரித்த விடம் என்றதற்கு, கடலைக் கடைகையில் தோன்றிய விடம் என்று பொருளுரைத்தலும் உண்டு. புறத்தே எறியக்கூடிய விடத்தைக் கழுத்திற் கொண்டு தனது தியாகப் பெருமையை உலகறியச் செய்பவர் என்றற்கு “விடமதனைக் களத்தில் தரித்தார்” எனவும், முனிவன் விடுத்த யானையைக் கொன்று அதன் தோலை உரித்துத் தமக்குப் போர்வையாகவும் ஆடையாகவும் கொண்டவர் என்றற்கு, “கரித்தோலை இடையில் தரித்தார்” எனவும் மகள்பாற் சொல்லி, நற்றாய் தலைவனது பெருமையைப் புகழ்கின்றாள். பெருமானை விரும்புதல் ஒழிக என விலக்கும் கருத்தினளாதல் தோன்ற “ஒருத்திதனைச் சடையில் தரித்தார்” என்றும், மற்றொரு பெண்ணைப் புடையில் தரித்தாராதலின், மகளே, நீ அவரை அடைந்தால் அவர்பால் இருந்து மகிழ்தற்கு இடமில்லை என்பாள், “மகளே நீ போனால் எங்கே தரிப்பாரோ” என்றும் உரைக்கின்றாள் அவர் இயல்பனைத்தும் நான் நன்கறிவேன் என்றுரைப்பாளாய், “என் னுளத்தே இருந்தார்” என இயம்புகிறாள்.

     இதனாள், நற்றாய் மகளது வேட்கையின் பயனின்மை கூறி விலக்கியவாறாம்.

     (8)