பக்கம் எண் :

1578.

     கருதும் அவரை வெளிக்கிழுப்பார்
          காணா தெல்லாம் காட்டிநிற்பார்
     மருதில் உறைவார் ஒற்றிதனில்
          வதிவார் புரத்தை மலைவில்லால்
     பொருது முடிப்பார் போல்நகைப்பார்
          பூவுண் டுறங்கும் புதுவெள்ளை
     எருதில் வருவார் மகளேநீ
          ஏதுக் கவரை விழைந்தனையே.

உரை:

      தம்மை உள்ளத்திற் கொண்டு வழிபட் டொழுகும் பெருமக்களின் தொண்டினை உலகறிய வெளிப்படுத்துபவரும், எல்லாவற்றையும் காணாமலே காட்டி நிற்பவரும், இடைமருது முதலிய திருப்பதிகளில் எழுந்தருள்பவரும். திருவொற்றியூரில் இருப்பவரும், அசுரருடைய முப்புரங்களை மலையாகிய வில்லை யேந்திப் போர்முகத்து நிற்பது போல் நின்று சிரித்து அழிப்பவரும், பூவுலகை வுண்டு அறிதுயில் கொள்ளும் திருமாலாகிய புதிய வெள்ளை எருதின்மேல் ஏறி வருபவருமாவர், நீ கூறும் சிவபெருமான்; மகளே, நீ அவரைக் காதலிப்பதனால் என்ன பயன்? எ.று.

     ஓரோரிடத்து உண்மை யன்புடையராய் மனத்தினுள் வைத்து வழி பட்டுத் தொண்டு செய்தொழுகும் திருத்தொண்டர்களைத் தன்னுடைய அருட் செயல்களால் உலகறிய வெளிப்படுத்தி மேம்படுத்துவதுபற்றிக் “கருதுமவரை வெளிக் கிழுப்பார்” என வஞ்சப் புகழ்ச்சியாக நற்றாய் உரைக்கின்றாள். “மூலை யிருந்தாரை முற்றத்தே விட்டவர் சாலப் பெரிய ரென்று உந்தீபற” (உந்தீ) என்று சான்றோர் கூறுவது ஈண்டு நினைவு கூரத்தக்கது. இவ்வருட் செயலுக்குத் திருத்தொண்டர் புராணம் நேரிய சான்றாகும். மனையின்கண் ஒடுங்கி யிருக்கும் உன் உள்ளத்தில் பித்தேற்றி ஊரவர் அறிந்து அலர்கூறச் செய்பவர் உனது காதலர் என்பது குறிப்பு. ஒன்றொன்றாய்க் கண்டறியும் உயிர்கள் போலாது எல்லாவற்றையும் ஒருங்கறிந்து கருவி கரணங்களால் காணப்படாதவற்றைக் காட்டுகின்ற ஞானமூர்த்தியாதல் விளங்க “காணா தெல்லாம் காட்டி நிற்பார்” என்று கூறுகின்றார். “காட்டாதன வெல்லாம் காட்டி, பின் கேளாதன வெல்லாம் கேட்பித்து, என்னை மீட்டேயும் பிறவாமல் காத்து ஆட்கொண்டான்” (சதகம்) எனத் திருவாதவூரர் முதலிய பெருமக்கள் உரைப்பது காண்க. மருது - திருவிடை மருதூர், இடையாறிடை மருது, திருமருதந்துறை. வதிதல் - தங்குதல். முப்புரப்போர்க்கு மலைவில்லேந்தி, தேரும் படையும் உடன்வரச் சென்ற சிவபெருமான் போரொன்றும் செய்யாமல் தனது நகைப்பில் எழுந்த தீயால் எரித் தழித்தாராதலால் “புரத்தை மலை வில்லால் பொருது முடிப்பார் போல் நகைப்பார்” என இசைக்கின்றார். இவ்வாறு தனது நகைப்பினாலேயே அழிக்க வல்லவரை நீ காதலிப்பது அச்சம் தருவதாக உளது என்பது குறிப்பெச்சம். பூ - பூவுலகு. வெண்மை நிற எருதாய் சிவனைத் தாங்குபவர் திருமால் என்று புராணம் கூறுவது பற்றி “பூவுண் டுறங்கும் புது வெள்ளை எருதில் வருவார்” என இயம்புகிறாள். திருமால் அறிதுயில் கொள்பவர் என்பது பற்றியும், உண்டார் உறங்குவது இயல்பாதல் குறித்தும் “பூவுண்டுறங்கும் எருது” எனவும், தூய அறத்துக்குரிய வெண்மை நிறம் சிவன் ஊர்தியான விடையின் நிற மாதலின் “புதுவெள்ளை எருது” எனவும் புகல்கின்றார். வெண்மை பழமையாயின் மாசு படிந்து ஒளி குன்றுவதுபற்றி “புது வெள்ளை” எனச் சிறப்பிக்கின்றார். இத்தகைய இயல்புடையவரான சிவபிரானை நீ காதலிப்பது பொருந்தாது என்பாளாய், “மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனை” என்று கழறுகின்றாள்.

     (5)