பக்கம் எண் :

1583.

     மாறித் திரிவார் மனம்அடையார்
          வணங்கும் அடியார் மனந்தோறும்
     வீறித் திரிவார் வெறுவெளியின்
          மேவா நிற்பார் விறகுவிலை
     கூறித் திரிவார் குதிரையின்மேற்
          கொள்வார் பசுவிற் கோல்வளையோ
     டேறித் திரிவார் மகளேநீ
          ஏதுக் கவரை விழைந்தனையே.

உரை:

      மகளே, நன்னெறியிலிருந்து மாறி அறிவு வேறுபட்டுத் தீநெறியில் நிற்பவர் சிந்தையைச் சேராதவரும், தன்னை வணங்கும் அடியார்களின் தூய உள்ளத்தில் சிறப்புற இயங்குபவரும், தத்துவாதீதப் பெருவழியில் விரும்பி யிருப்பவரும், மதுரையில் தலையில் விறகு எடுத்து விலைபேசித் திரிந்தவரும், மணிவாசகர் பொருட்டுக் குதிரை மேல் இவர்ந்து வந்தவரும், திரண்ட வளையணிந்த உமாதேவியோடு எருதின் மேல் ஏறி இயலுபவருமாகிய தியாகப் பெருமானை என்ன பயன் கருதிக் காதலிக்கின்றாய்; வேண்டா. எ.று.

இயல்பாகவே யாவரும் நன்னெறிக்கண் நிற்பவராயினும், எண்ணத் தியல்பால் நெறிமாறித் தீயநெறியில் அறிவு திரிந்து கெடுமிடத்து, அவர் மனத்தின்கண் சிவனது திருவருள் விளக்கம் தோன்றுவதில்லை என்பது பற்றி “மாறித் திரிவார் மனம் அடையார்” எனத் தெளிவு பிறங்கத் தெரிவிக்கின்றாள். அன்பு நெறியில் நின்று தனது திருவருளை நினைந்து தொடங்கி வழிபடும் அடியார்களின் தூய மனத்தின்கண் வீற்றிட இருப்பது சிவன் செயலாதல் தெரிவிப்பாளாய், “வணங்கும் அடியார் மனந்தோறும் வீறித் திரிவார்” என விளம்புகின்றாள். நில முதல் சிவம் ஈராக ஓங்கித் தோன்றும் மாயா தத்துவங்களுக்கு அப்பாலுள்ளது, பரசிவம் அன்றி வேறொன்றில்லாத வெறு வெளி யென்றும், அதனை இடமாகக் கொள்வதுபற்றிச் சிவபெருமானை “வெறு வெளியில் மேவா நிற்பார்” எனவும் உரைக்கின்றாள். மதுரையில் பாணபத்திரனுக்காக விறகு விற்பவனாகவும் மாணிக்கவாசகர் பொருட்டுக் குதிரைச் சேவகனாகவும் அருள் விளையாடல் புரிந்ததனை நினைப்பிப்பாளாய் “விறகு விலை கூறித் திரிவார், குதிரையின் மேற் கொள்வார்” என்று கூறுகிறாள். 'பசு' ஈண்டு எருதின் மேற்று. கோல் வளை - திரண்ட வளைகளையுடைய பெண்; இது உமா தேவியைக் குறித்து நின்றது. இவ்வாறு இயலும் பெருமானை, மகளே நீ காதலிப்பது நன்றன்று என விளக்குங் கருத்தால், “மகளே நீ ஏதுக்கவரை விழைந்தனையே” என இசைக்கின்றாள்.

     (10)