பக்கம் எண் :

1589.

     சிற்றம் பலத்தார் ஒற்றிநகர்
          திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
     உற்றங் குவந்தோர் வினைகளெல்லாம்
          ஓட நாடி வரும்பவனி
     சுற்றுங் கண்கள் களிகூரத்
          தொழுது கண்ட பின்அலது
     முற்றுங் கனிவாய்ப் பெண்ணேநான்
          முடிக்கோர் மலரும் முடியேனே.

உரை:

      முற்றப் பழுத்த கோவைக் கனி போன்ற வாயையுடைய தோழி, தில்லைச் சிற்றம்பலத்தை உடையவரும், திருவொற்றியூரில் எழுந்தருளுபவருமாகிய தியாகப் பெருமான் தன்பால் வந்து அன்பால் மகிழ்ச்சி அடையும் மெய்யன்பர்களின் வினைகள் அறுபட்டு விலகி நீங்குமாறு நினைந்து வீதியில் எழுந்தருளும் திருவுலாவைத் திசை யெல்லாம் சுழன்று நோக்கும் கண்கள் மகிழ்ச்சி மிக, கைகள் தொழு தேத்தக் கண்ட பின்பன்றி என் தலைமுடிக்கு ஒரு பூவும் சூட மாட்டேன், காண். எ.று.

     முற்றிய கோவைக் கனி செக்கச் சிவப்பாக இருப்பது பற்றி “முற்றுங் கனி” என்று மொழிகின்றார். கனியென்றது, ஈண்டு மகளிர் சிவந்த வாயிதழுக்கு ஒப்பாகக் கூறப்படுவது. தில்லைச் சிற்றம்பலத்தை யுடையவரும், திருவொற்றியூரில் எழுந்தருள்பவரும் ஒருவரே யாதலின், “சிற்றம்பலத்தார் ஒற்றி நகர் திகழும் செல்வத்தியாகர்” எனச் செப்புகின்றார். பல ஊர்களிலும் எழுந்தருள்பவர் சிவபெருமான் ஒருவரே யாதலின் பல ஊர்களையும் சேர்த்துக் கூறுதல் சான்றோரியல்பு. “உளங் கொள்வார் உச்சியார் கச்சி ஏகம்பர் ஒற்றியூருறையும் அண்ணாமலை அண்ணல்” (இலம்பை) என ஞானசம்பந்தர் ஓதுவது காண்க. தன்னை நினைந்து தன்பால் வந்து தன்னடி வணங்கி வழிபடும் அன்பர்களின் வினைப்பிடிப்பைப் போக்குபவராதலின் “உற்றங்குவந்தோர் வினைகளெலாம் ஓட நாடி வரும் பவனி” என்றுரைக்கின்றார். கண்களைச் சுழற்றித் தமது பார்வையைச் செலுத்துவது இளமகளிரின் இயல்பாதல் பற்றி “சுற்றும் கண்கள்” என்றும், காட்சியில் பிறக்கும் இன்பத்தைக் குறித்துக் “கண்கள் களி கூர” என்றும், கண்டவிடத்துக் கருத்து ஒன்றுதலால் கைகள் தாமே குவிவதால் “தொழுது கண்டபின்” என்றும் சொல்லுகிறாள். இளமகளிர் மங்கலப் பொலிவு தோன்ற கூந்தலில் பூச் சூடிக் கொள்ளுதல் இன்றியமையாதாயினும், கண்ட பின்னலது நான் முடிக்கோர் மலரும் முடியேன் என்றும் மொழிகின்றாள். முடி - கூந்தல்; முடித்தல் - சூடிக் கொள்ளுதல்.

     (6)