பக்கம் எண் :

1593.

     செக்கர்ச் சடையார் ஒற்றிநகர்ச்
          சேருஞ் செல்வத் தியாகர்அவர்
     மிக்கற் புதவாண் முகத்தினகை
          விளங்க விரும்பி வரும்பவனி
     மக்கட் பிறவி எடுத்தபயன்
          வசிக்க வணங்கிக் கண்டலது
     நக்கற் கியைந்த பெண்ணேநான்
          ஞாலத் தெவையும் நயவேனே.

உரை:

      சிவபெருமான் திருவடித் தொண்டில் ஈடுபட்டுள்ள என் தோழி, சிவந்த சடையை யுடையவரும், திருவொற்றியூரின்கண் எழுந்தருள்பவருமான செல்வத் தியாகப் பெருமான், மிகவும் அற்புதமான அருளொளி திகழும் திருமுகத்தில் குறுநகை யரும்ப விருப்பத்துடன் எழுந்தருளும் திருவுலாவை, எடுத்துள்ள மக்கட் பிறவியின் பயன் பொருந்த மெய்யால் வணங்கிக் கண்ட பின்னன்றி, உலகில் எப்பொருளையும் காண விரும்பேன், காண். எ.று.

     நக்கன் - சிவபெருமான். “நக்கன் நாமம் நமச்சிவாயவே” எனப் பெரியோர் கூறுவது காண்க. மகிழ்தற் பொருட்டாய 'நகல்' என்பது நக்கல் என மிக்கதெனினுமாம். செக்கர் - செம்மை நிறம். சேர்தல் - எழுந்தருளல். 'செல்வன்' என்பது சிவனுக்குரிய பெயர்களி லொன்றாதலின், செல்வனாகிய தியாகர் என்பது செல்வத் தியாகர் என்று வந்தது. வாண்முகம் - திருவருள் ஒளி திகழும் முகம். சிவபிரான் திருமுகத்தில் இயல்பாகவே புன்சிரிப்புத் தவழ்தலின் “வாண் முகத்தில் நகை விளங்க” எனக் கூறுகின்றாள். காண்பார் அருளின்பம் பெறுவது குறித்த புன்னகை என்பது புலப்பட, “நகை விளங்க” என நவில்கின்றாள். நகை தவழும் வாண்முகக் காட்சி பெறுவது மக்கட் பிறப்பின் பயன் என்பது பெரியோர் கொள்கை. “குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும், பனித்த சடையும், பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும், இனித்தம்முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால், மனித்தப் பிறவியும் வேண்டுவதே யிந்த மாநிலத்தே” எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. ஞாலம் - நிலவுலகம். நயத்தல் - விரும்புதல்.

     (10)