பக்கம் எண் :

86. புணரா விரகு பொருந்துறு வேட்கையின் இரங்கல்

திருவொற்றியூர்

    அஃதாவது புணர்ந்து இன்புறுத்துவார் போலப் பயின்று புணரா தொழுகும் சூழ்ச்சியை இறைவன் மேற்கொள்ளுதலால், பெருந்திணை நங்கை வேட்கை மீதூர்ந்து ஆற்றாமையால் தோழிக்குச் சொல்லி வருந்துவதாம். புணரா விரகு - புணரா தொழுகும் சூழ்ச்சி. பொருந்துறு வேட்கை, புணராமையால் உள்ளத்தில் தோன்றி மிகும் வேட்கை. வேட்கை மீதூர்தலால் “விண்ணினைக் குத்தி மெய்யிளைப்பவர் போல்” மெலிவுற் றுரைத்தல், வேட்கையின் இரங்கல் எனக் குறிக்கப்படுகிறது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1604.

     உள்ளார் புறத்தார் ஒற்றிஎனும்
          ஊரார் ஒப்பென் றொன்றுமிலார்
     வள்ளால் என்று மறைதுதிக்க
          வருவார் இன்னும் வந்திலரே
     எள்ளா திருந்த பெண்களெலாம்
          இகழா நின்றார் இனியமொழித்
     தெள்ளார் அமுதே என்னடிநான்
          செய்வ தொன்றும் தெரிந்திலனே.

உரை:

      இனிய சொற்களைப் பேசும் தெளிந்த அமுது போன்ற தோழி, உலகுயிர்களின் அகத்தும் புறத்தும் கலந்திருப்பவரும், திருவொற்றியூரை யுடையவரும், தனக்கு ஒப்புயர்வாக ஒன்றுமில்லாதவரும், வள்ளலே யென வேதங்களால் துதிக்கப்படுபவருமான சிவபெருமான், இன்று என்பால் வருதற்குரியவர் இன்னும் வந்தாரில்லை; இதுகாறும் என்னை இகழ்தலில்லாத மகளிரெல்லாம் இப்பொழுது என்னை நோக்கி இகழ்கின்றார்கள்; நான் செயற்பாலது யாதாம்? எனக்கு யாதொன்றும் தெரியவில்லை. எ.று.
     பொருள் தோறும் உள்ளும் புறமும் ஒப்பக் கலந்துறைவது இறைவற்கியல்பாதலின், “உள்ளார் புறத்தார்” என வுரைக்கின்றாள். “தனக்குவமை யில்லாதான்” என்று சான்றோர் மொழிதலின், “ஒப்பென்று ஒன்றுமிலார்” எனப் புகல்கின்றாள். ஒப்புக் கூறவே, உயர்வும் இன்மை பெற்றாம். எப்பாலவர்க்கும் வரையாது அருள் வழங்கும் தன்மைபற்றி வேதங்கள் பாராட்டுதலால், “வள்ளால் என்று மறை துதிக்க வருவார்” என்று கூறுகிறாள். வருதற்குரியவர் வாராமை வருத்தம் தருதலின், “வருவார் இன்னும் வந்திலரே” என மொழிகின்றாள். நலங் கண்டு பாராட்டெடுத்த ஏனை மகளிர், தனது மெலிவு கண்டு இகழ்கின்றன ரென்பாள், “எள்ளா திருந்த பெண்களெலாம் இகழா நின்றார்” எனப் புலம்புகின்றாள். சொல்லில் இனிமையும் உருநலத்தில் தெளிவும் உடைமை பற்றி, தோழியை, “இனிய மொழித் தெள்ளா ரமுதே” எனப் புகழ்கின்றாள். எதிர்பார்த்தது எய்தாவிடத்து எய்துவது மயக்கமாதலின், “செய்வ தொன்றும் தெரிந்திலனே” என வருந்துகிறாள்.

     இதனால், திருவருட் கூட்டம் நினைந்தாங்கு எய்தாமையாற் பெருந் திணைத்தலைவி கையறவு படுகின்றமை தெரிவித்தவாறாம். இக்கருத்தே இனி வரும் பாட்டுக்களிலும் கூறிக்கொள்க.

     (1)