பக்கம் எண் :

1631.

     ஆரூர் உடையார் அம்பலத்தார்
          ஆலங் காட்டார் அரசிலியார்
     ஊருர் புகழும் திருஒற்றி
          யூரார் இன்னும் உற்றிலரே
     வாரூர் முலைகள் இடைவருத்த
          மனநொந் தயர்வ தன்றிஇனிச்
     சீருர் அணங்கே என்னடிநான்
          செய்வ தொன்றும் தெரிந்திலனே.

உரை:

      சிறப்புடைய அணங்கு போலும் தோழி, திருவாரூரையும் தில்லைச் சிற்றம்பலத்தையும் திருவாலங்காட்டையும் திருவரசிலியையும் இடமாக வுடையவரும், ஊர்தோறும் புகழ் பரந்த திருவொற்றியூரையுடையவருமான சிவபெருமான் இன்னமும் என்பால் வந்து சேர்கின்றாரில்லை; கச்சணிந்த கொங்கைகள் எனது நுண்ணிய இடையை வருத்துவதால் மனநோயுற்று அயர்வுறுவதன்றி வேறே செய்வதறியாது திகைக்கின்றேன். எ.று.

     திருவாரூரும் திருவொற்றியூரும் சிறப்புடையன என்று பெரியோர் கூறுவ துண்மையின், ஆரூரை முன்னிறுத்தி ஒற்றியூரை இறுதியில் வைத்துக் கூறுகின்றாள். “ஊர் தானாவது உலகேழும் உடையார்க்கு ஒற்றி யாரூர்” (கடவூர்) என நம்பியாரூர் உரைப்பது காண்க. அம்பலம் எனப் பொதுப்படக் கூறுதலால் தில்லைச் சிற்றம்பலம் கொள்ளப்பட்டது. ஊர் தோறும் புகழ் பரந்த தென்றற்கு “ஊரூர் புகழும் திருவொற்றியூரார்” என்று இசைக்கின்றாள். “அல்லி நீள்வயல் சூழ்ந்த அரசிலி” என ஞானசம்பந்தராற் புகழப்பெறுவது திருவரசிலி. இஃது இப்போது ஒழுந்தியாப்பட்டு என வழங்குகிறது. இடைக்காலச் சோழர் காலத்தில், இவ்வூர், “சயங்கொண்ட சோழ மண்டலத்து ஓய்மா நாடான விசய ராசேந்திர வளநாட்டுப் பெருவெம்பூர் நாட்டுத் தேவதானமான திருவரசிலி” (கல். எண்:821) என்று குறிக்கப்படுகிறது. இடை சிறுத்தலும் கொங்கைகள் பெருத்தலும் மகளிர்க்கு அழகென்பர். “அகலல்குல் தோள் கண்ணென மூவழிப் பெருகி” என்பது கலித்தொகை. வார் - கச்சு. இவ்வாற்றால் வேட்கை மிக்கு திகைப்பு விளைந்த தென்பதாம். தாக்கணங்கு போலாது அறிவும் தெளிவு முடைமை தோன்றத் தோழியைச் “சீருர் அணங்கே” என்று சிறப்பிக்கின்றாள்.

     (28)