1633. சங்கக் குழையார் சடைமுடியார்
சதுரர் மறையின் தலைநடிப்பார்
செங்கட் பணியார் திருஒற்றித்
தேவர் இன்னும் சேர்ந்திலரே
மங்கைப் பருவம் மணமில்லா
மலர்போல் ஒழிய வாடுகின்றேன்
திங்கள் முகத்தாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
உரை: சந்திரன் போன்ற முகத்தையுடைய தோழி, சங்கினாலான குழையையுடையவரும், சடை தாழும் முடியை யுடையவரும், சதுரப் பாடுடையவரும், வேதங்களின் உச்சியில் நின்று நடிப்பவரும், சிவந்த கண்களையுடைய பாம்பையணிந்தவரும், திருவொற்றியூரில் எழுந்தருளும் தேவருமான சிவபெருமான், இன்னும் என்பால் வந்திலர்; மங்கையாகிய என்னுடைய இளம் பருவம் நறுமணமில்லாமல் வாடிக்கெடும் மலர் போலக் கெட நின்று வருந்துகிறேன்; இந்நிலையில் செய்வதொன்றும் அறியாமல் திகைக்கின்றேன். எ.று.
மகளிரின் ஒளி திகழும் வட்ட வாண்முகத்துக்குச் சந்திரனை யுவமம் கூறும் மரபு பற்றி, “திங்கள் முகத்தாய்” என்று சிறப்பிக்கின்றாள். வலக் காதில் அணிவது குழை. தோடொரு காதிலும் குழையொரு காதிலும் அணிவது பண்டையோர் மரபு. குழை வெண்சங்கினால் செய்யப்படுவது. “சங்கவெண் குழையோர் காதிற் கோமான்” (மறுமாற்) என்று திருநாவுக்கரசர் உரைக்கின்றார். நால்வகை யுபாயமும் வல்லவர், சதுரர் எனப்படுவர். மறை முடிவு உண்மை ஞானமாகலின், ஞான வெளியில் நடனமிடுவது பற்றிச் சிவபிரானை, “மறையின் தலைநடிப்பார்” எனக் கூறுகின்றாள். பணி - பாம்பு. மங்கைப் பருவம் இளமை கனியும் செவ்வி, மணம் குன்ற மலர் வாடுவது போல இளமை குன்றப் பெண்மை நலம் கெடுமென்பது கருத்து. (30)
|