பக்கம் எண் :

1635.

     தரும விடையார் சங்கரனார்
          தகைசேர் ஒற்றித் தனிநகரார்
     ஒருமை அளிப்பார் தியாகர்எனை
          உடையார் இன்று வருவாரோ
     மருவ நாளை வருவாரோ
          வாரா தென்னை மறப்பாரோ
     கருமம் அறிந்த குறமடவாய்
          கணித்தோர் குறிதான் கண்டுரையே.

உரை:

      செயல் நிகழ்ச்சிகளை யறிந்துரைக்கும் இளங்குறமங்கையே, அறவுருவாகிய எருதூர்தியையுடையவரும், சங்கரனும், அழகு பொருந்திய திருவொற்றியூரின்கண் எழுந்தருள்பவரும், உறுதி வழங்குபவரும், தியாகப் பெருமானும், என்னையுடையவருமான சிவபெருமான் என்னைக் கூடுதற்கு இன்று வருவாரோ, நாளை வருவாரோ, வாராமல் மறந்து விடுவாரோ, காலக் கணக்கெடுத்து ஒரு குறி சொல்லுக. எ.று.

     சிவனது ஊர்தியாகிய எருது அறத்தின் திருவுரு என்பது பற்றி “தரும விடையார்” எனவும், சங்கரனென்பது அவருடைய பெயர்களிலொன்றாதலால் “சங்கரனார்” எனவும் இயம்புகிறாள். தகை - பல்வகை வளங்களால் உண்டாகும் அழகு. ஒருமை - ஒரு பிறப்போடே அமையும் உறுதி. என் உயிர் உடல் பொருள் மூன்றும் உரிமையாகக் கொண்டவரென்பாள், “எனையுடையார்” என்று கூறுகிறாள். மருவல் - கூடுதல். இன்றோ நாளையோ வருவாரோ அன்றி வாராது மறந்து போவாரோ என்பது அலமரல். கோளும் நாளும் கொண்டு கரும முடிபு காண்டலின் “கணித்தோர் குறிதான் கண்டுரையே” என மொழிகின்றாள்.

     (2)