பக்கம் எண் :

1644.

     அரவக் கழலார் கருங்களத்தார்
          அஞ்சைக் களத்தார் அரிபிரமர்
     பரவப் படுவார் திருஒற்றிப்
          பதியில் அமர்ந்தார் பாசுபதர்
     இரவு வருமுன் வருவாரோ
          என்னை அணைதற் கிசைவாரே
     குரவ மணக்குங் குறமடவாய்
          குறிநீ ஒன்று கூறுவையே.

உரை:

      குரா மலரின் மணம் கமழும் குறமகளே, ஒலிக்கின்ற கழலை யுடையவரும், கரிய கழுத்தை யுடையவரும், திருவஞ்சைக்களத்திற்கோயில் கொண்டருள்பவரும், திருமால் பிரமன் ஆகியோரால் போற்றப் படுபவரும், திருவொற்றியூரைத் தமக்கு இடமாகக் கொண்டவரும், பாசுபதத்தை யுடையவருமான சிவபிரான், இன்று இரவுப்போது வருமுன்பே என்பால் வருவாரோ? என்னைக் கூடுதற்கு விரும்புவாரோ? எனக்கொரு குறி சொல்லுக. எ.று.

      குரா, குரவு என்றும் குரமென்றும் வரும்; அரா அரவெனவும் அரவமெனவும் வழங்குதல் போல. இதன் மலர் நறிய மணமுடையதாகலின் “குரவ மணக்கும் குறமடவாய்” என்று கூறுகிறாள். கழல் - வீரர் காலில் அணியும் தண்டை. உள்ளே பரற்பெய்து செய்யப்படுவதுபற்றி, “அரவக் கழலார்” என்றும், விடமுண்டதால் கரிய கழுத்தை யுடையரானதால் “கருங்களத்தார்” என்றும் இயம்புகிறாள். களம் - கழுத்து. அஞ்சைக் களம் - சேரநாட்டுச் சிவன் திருக்கோயில்களில் ஒன்று. 'வஞ்சிக்களம்' என்னும் பெயருடைய இஃது ஆயிரமாண்டுகட்கு முன்பே அஞ்சைக்களமென மருவியது. நம்பியாரூரர், “அலைக்குங் கடலங்கரைமேல் மகோதை அணியார் பொழில் அஞ்சைக் களத் தப்பனே” எனப் பராவுகின்றார். பரவுதல் - போற்றுதல். பாசுபதம் என்னும் படையை யுடையவராதலால், “பாசுபதர்” எனச் சிவனைப் புகல்வர். இசைதல் - விரும்புதல்; உடன் படுதலுமாம்.     

     (11)