பக்கம் எண் :

88. காட்சி அற்புதம்

தலைவி இரங்கல்

திருவொற்றியூர்

    அஃதாவது காதலனாகிய தியாகப் பெருமானைக் கனவிற் கண்டு இன்புற்ற நங்கை, நனவிற் காணாமை நினைந்து தோழியொடு உசாவி வருந்துவதாகும், பிரிவின்றியிருந்து இடையறாக் காட்சியால் இன்புறும் திறமே நினைந்து மகிழும் காதல் வாழ்வுக்கு ஒருவரை யொருவர் காணாமை கையறவு விளைவித்துத் துன்புறுத்துமாகலின், இஃது தலைவி இரங்கல் என்று குறிக்கப்படுகிறது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1645.

     பூணா அணிபூண் புயமுடையார்
          பொன்னம் பலத்தார் பொங்குவிடம்
     ஊணா உவந்தார் திருஒற்றி
          யூர்வாழ் வுடையார் உண்மைசொலி
     நீணால் இருந்தார் அவர்இங்கே
          நின்றார் மீட்டும் நின்றிடவே
     காணா தயர்ந்தேன் என்னடிநான்
          கனவோ நனவே கண்டதுவே.

உரை:

      பிறர் பூணாத அணிகளைத் தமக்குப் பூணாரமாக வணியும் தோள்களையுடையவரும், பொன்னம்பலத்தை ஆடிடமாக வுடையவரும், கடலிற் பொங்கிய விடத்தை உண்பொருளாக மகிழ்வுடன் உண்டவரும், திருவொற்றியூரைத் தமக்கு உறைவிடமாக வுடையவரும், மெய்ம்மை யுணர்த்தற்கு நீண்ட ஆல நீழலில் இருந்தவருமான சிவபிரான், இவ் விடத்தே வந்து நின்றார். மீளவும் போந்து நின்றாராக நான் அவரைக் காணேனாயினேன்; தோழி, நான் கண்டது கனவோ நனவோ, தெரியவில்லை. எ.று.

     பூணா அணி - எருக்கங்கண்ணி, என்புமாலை, விடமுடைய பாம்பு முதலியன. இவற்றை யணிவதுபற்றி, “பூணா வணிபூண் புயமுடையார்” எனப் புகன்றுரைக்கின்றாள். பொன்னம்பலம் - தில்லைப் பதியிலுள்ள சிற்றம்பலம்; இது பொன் வேய்ந்துள்ளமையால் பொன்னம்பலமெனப்படுகிறது. “செம்பொன்னினால் எழுதி வேய்ந்த சிற்றம்பலம்” (கோயில்)என்பர் நாவரசர். மலையை மத்தாக நாட்டிக் கடைந்தபோது கடலிற் பொங்கியெழுந்ததாகலின் “பொங்குவிடம்” எனவும், அதனை இனிதாக வாங்கியுண்டமையால் “ஊணாவுவந்தார்” என்றும் உரைக்கின்றாள். “வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்ததொரு மாகடல் விடம் தானமுது செய்தருள் புரிந்த சிவன்” (காளத்தி) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. உண்மை - மெய்ம்மைப் பொருள். சொலி, சொல்ல வென்பதன் திரிபு; இதனைச் செயவெனெச்சத் திரிபு என்பதுமுண்டு. “வினையெஞ்சு கிளவி வேறுபல் குறிய” என்று தொல்காப்பியம் கூறும். நீணால் - நீண்ட ஆலமரம். நீள், நீண் என வழங்குவதுண்டு. “நீணுல கெலாமாளக் கொடுத்தனன்” (கோயில்) எனத் திருநாவுக்கரசர் வழங்குவதறிக. நனவில் இங்கே நின்றவர் கனவில் மீளவும் போந்து இங்கே நின்றாராகக் காணாதொழிந்தேன் எனக் கலங்குவது விளங்க, “இங்கே நின்றார் மீட்டும் நின்றிடக் காணா தயர்ந்தேன்” என்று கூறுகிறாள்.

     இதனால், காதற் கண்ணுதற் பெருமானைக் கண்ட நங்கை காட்சி கனவோ நனவோ எனக் கலங்கிக் கையறவு பட்டவாறாம். இனி வருமிடங்களிலும் இதுவே கருத்தாதல் அறிக.

     (1)