பக்கம் எண் :

1646.

     ஓட்டில் இரந்துண் டொற்றியிடை
          உற்றார் உலகத் துயிரைஎலாம்
     ஆட்டி நடிப்பார் ஆலயத்தின்
          அருகே எளிய ளாம்எனவே
     ஏட்டில் அடங்காக் கையறவால்
          இருந்தேன் இருந்த என்முன்உருக்
     காட்டி மறைத்தார் என்னடிநான்
          கனவோ நனவோ கண்டதுவே.

உரை:

     திருவொற்றியூரின்கண் எழுந்தருள்பவரும், உலகில் உயிர்கள் யாவும் பிறந்து வாழ்ந்து இறக்குமாறு இயக்கற் பொருட்டு அம்பலத்தில் கூத்தாடுபவருமான தியாகப் பெருமான், மகளிருள் எளியவளெனக் கருதும் வண்ணம் எழுத்துக் கடங்காத துயருற்றுத் திருக்கோயிலருகே இருந்தேனாக, இருந்த என்முன்னே தமது திருவுருவைக் காட்டிப் பின்பு அதனை மறைத்துக்கொண்டார்; நான் கண்ட இது கனவோ நனவோ தெரிகிலேன். எ.று.

     சிவபெருமான் உண்பலி ஏற்பது பிரமன் தலையோடாதலின், “ஓட்டில் இரந்துண்டு” எனவும், திருவொற்றியூரிற் கோயில் கொண்டெழுந்தருளுவதால் “ஒற்றியிடை யுற்றார்” எனவும் இயம்புகிறாள். இறைவன் திரு நடனம், படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்ற ஐவகைத் தொழிலும் இயலுவது குறித்ததாகலின், “உலகத்துயிரை யெலாம் ஆட்டி நடிப்பார்” என உரைக்கின்றாள். ஏனை மகளிருடன் யான் திருக்கோயிலருகே சென்று அவர்பாலுள்ள காதல் வேட்கை மிகுதலால் உண்டான துயரத்தால் செயலற்று நின்றேனாக, என் கண் காணத் தமது திருவுருவைக் காட்டியுடனே மறைந்து போனார் என்பாள், “ஆலயத்தினருகே எளியளாம் எனவே ஏட்டிலடங்காக் கையறவால் இருந்தேன்; இருந்த என்முன் உருக்காட்டி மறைத்தார்” எனக் கூறுகிறாள். திருவுருவைக் கண்டதும், உடனே அஃது மறைந்ததும், நினைவை அலைத்தலால், “என்னடி நான் கண்டது கனவோ” என வினவுகிறாள்.

     (2)