1651. ஆல நிழற்கீழ் அன்றமர்ந்தார்
ஆதி நடுவீ றாகிநின்றார்
நீ்ல மிடற்றார் திருஒற்றி
நியமத் தெதிரே நீற்றுருவக்
கோல நிகழக் கண்டேன்பின்
குறிக்கக் காணேன் கூட்டுவிக்கும்
காலம் அறியேன் என்னடிநான்
கனவோ நனவோ கண்டதுவே.
உரை: அந்நாள் நால்வர் பொருட்டுக் கல்லாலின்கீழ் வீற்றிருந்த வரும், உலகிற்கு முதலும் நடுவும் ஈறுமாகியவரும், நீலகண்டத்தை யுடையவருமான சிவபெருமானைத் திருவொற்றியூர்த் தெருவின்கண் திருநீறு தரித்த அழகிய உருவமாகக் கண்ணெதிரே தோன்றக் கண்டு மனத்திற் றெளிதற்குள் காணேனாயினேன்; அவர்பால் என்னைப் புணர்க்கும் நற்காலம் எப்போது வருமோ, அறியேன்; ஈதென்ன நான் கண்டது கனவோ நனவோ? எ.று.
கல்லாலின் கீழிருந்து சனகர் முதலிய நால்வர்க்கும் மெய்ப்பொருள் அருளிய நாளை, 'அன்றெ'னக் குறிக்கின்றாள். உலகங்களனைத்துக்கும் முதலும் இடையும் கடையுமாகிய செம்பொருளாதலால், சிவனை, “ஆதி நடுவீறாகி நின்றார்” எனவுரைக்கின்றாள். நியமம் - சன்னிதித்தெரு. நீற்றுருவக் கோலம் - திருநீறணிந்த திருவுருவம். குறித்தல் - மனத்தின் கண் தெளியக் கோடல். கூட்டுவிக்கும் காலம் - சிவயோக போகங்களை எய்தும் காலம். திருநீற்றுக் கோலத் திருமேனியைக் கண்டது கனவோ நனவோ என வினவுகின்றாள். (7)
|