பக்கம் எண் :

1657.

     கருணைக் கொருநேர் இல்லாதார்
          கல்லைக் கரைக்கும் கழலடியார்
     அருணைப் பதியார் ஆமாத்தூர்
          அமர்ந்தார் திருவா வடுதுறையார்
     இருணச் சியமா மணிகண்டர்
          எழிலார் ஒற்றி இறைவர்இந்தத்
     தருணத் தின்னும் சேர்ந்திலர்என்
          சகியே இனிநான் சகியேனே.

உரை:

      தோழி, அருளாள்வதில் ஒப்பொருவர் இல்லாதவரும், கல்லையும் கரைந்துருகுவிக்கும் மெல்லிய திருவடியை யுடையவரும், திருவண்ணாமலை திருவாமாத்தூர் ஆகிய பதிகளில் எழுந்தருள்பவரும், திருவாவடுதுறையை யுடையவரும், இருணிறம் பொருந்திய மணிபோன்ற கழுத்தையுடையவரும், அழகிய திருவொற்றியூர் இறைவருமாகிய தியாகப் பெருமான், இப்பருவத்தில் இப்போதும் என்னை அணைந்திலராதலால் நான் இனி ஆற்றாதொழிகுவேன், காண். எ.று.

     கருணை - அருள். ஒருநேர் இல்லாதவர் - ஒப்பொருவரும் இல்லாதவர். “ஒப்பொருவரில்லாத ஒருவன் தன்னை, ஓத்தூரும் உறையூரு மேவினானை”(ஆருர் அறநெறி) எனப் பெரியோர் புகழ்வது காண்க. நேர் - ஒப்பு. மென்மைத் தன்மையாற் கல்லும் உருகுமென்றற்குக் “கல்லைக் கரைக்கும் கழலடியார்” எனக் கூறுகின்றாள். அண்ணாமலையைப் பிற்காலத்தார் அருணகிரியென்று மாற்றியும் அருணையென மருவியும் வழங்குகின்றார்கள். ஆமாத்தூர்ப் “பங்கயமதுவுண்டு வண்டிசைபாட மாமயிலாட விண் முழவங் கையாலதிர்க்கும் ஆமாத்தூர்” என்று ஞானசம்பந்தராற் சிறப்பிக்கப்படுவது காண்க. இருண்டு நீலமணி போன்று விளங்குதலால், இறைவன் திருக்கழுத்தை, “இருணச்சிய மாமணிகண்டர்” என்று போற்றுகின்றாள். தருணம்: ஈண்டு இளமைப் பருவம் குறிக்கின்றது. இப்பருவத்தில் இப்பொழுதிற் சேராமையால் யான் ஆற்றேனாகின்றேன் என்கிறாளாம்.

     (3)