1659. துதிசெய் அடியார் தம்பசிக்குச்
சோறும் இரப்பார் துய்யர்ஒரு
நதிசெய் சடையார் திருஒற்றி
நண்ணும் எனது நாயகனார்
மதிசெய் துயரும் மதன்வலியும்
மாற்ற இன்னும் வந்திலரே
சதிசெய் தனரோ என்னடிஎன்
சகியே இனிநான் சகியேனே.
உரை: தோழி, துதித்துப் பாடுகின்ற நம்பியாரூரர் முதலிய மெய்யடியார் பசி போக்குதற்குச் சோறிரந்தளிப்பவரும், தூயவரும், ஒப்பற்ற கங்கையாறு தங்குகிற சடையை யுடையவரும், திருவொற்றியூரில் எழுந்தருளும் எனது நாயகருமான சிவபிரான், எண்ணத்தால் உயர்கின்ற காமவேளின் வன்செயலைப் போக்குதற்கு இன்னமும் என்பால் வரவில்லை; யாவரேனும் கலகம் செய்தொழிந்தனரோ? தெரியாமல் ஆற்றாமை எய்தி வருந்துகிறேன். எ.று.
நாளும் தமிழ்ப்பதியம் பாடிப் பரவும் நம்பியாரூரைத் “துதிசெய்யடியார்” எனக் குறிக்கின்றாள். திருக்கச்சூரில் ஆலக்கோயிற் புறத்தே பசித்திருந்த நம்பியாரூரர்க்கு இறைவன் சோறு இரந்துவந்தளித்த வரலாறு பற்றி, “அடியார்தம் பசிக்குச் சோறும் இரப்பார்” எனவுரைக்கின்றாள். தூயர், துய்யர் என வந்தது. ஒரு நதி - ஒப்பற்ற கங்கையாறு. தன் மலரம்புகளால் தாக்கப்படுவோர் காம நினைவுகளால் விரக நோய் மிகச்செய்வது பற்றிக் காமதேவனை, “மதிசெய் துயரும் மதன்” எனவும், அவனுடைய வன்செயலை வலியெனவும் புகல்கின்றாள். காம வேட்கை முற்றவும் கடியும் குற்றமன்மையால், அதன் வேட்கை வெம்மையைத் தணிக்கும் செயலை, “மாற்ற இன்னும் வந்திலர்” என வுரைக்கின்றாள். மாற்றல், போக்குதலுமாம். சதி - கலகம். பெண்ணாதலால் வேறு மகளிர் குறுக்கிட்டுத் தியாகப் பெருமான்பால் மாறாவன சொல்லித் தடுத்திருப்பரோவென ஐயுறுகின்றமை புலப்பட, “சதி செய்தனரோ” என்று எண்ணி வருந்துகின்றாள். வேண்டாதவற்றை எதிர்பெய்து பரிதல் மகளிர் இயல்பாதலின், சதி செய்தனராதல் வேண்டுமென நினைக்கின்றாள். (5)
|