பக்கம் எண் :

1664.

     தீர்ந்தார் தலையே கலனாகச்
          செறித்து நடிக்கும் திருக்கூத்தர்
     தேர்ந்தார் தம்மைப் பித்தடையச்
          செய்வார் ஒற்றித் தியாகர்அவர்
     சேர்ந்தார் அல்லர் இன்னும்எனைத்
          தேடி வரும்அத் தீமதியம்
     சார்ந்தால் அதுதான் என்செயுமோ
          சகியே இனிநான் சகியேனே.

உரை:

      தோழி, தலையோட்டையே பலியேற்குங் கலமாக வரைந்து கொண்டவரும், தாளம் பொருந்திட நடிக்கும் திருக்கூத்தையுடையவரும், தன்னுடைய மெய்ம்மை யுணர்ந்து போற்றும் அன்பர்களைத் தன்னையே சூழ்ந்தொழுகும் பித்துடையவ ராக்குபவரும், திருவொற்றியூர்த் தியாகப் பெருமானுமாகிய சிவபிரான், என்னை இன்னமும் அடைந்து சேர்ந்தாரில்லை; யான் இருக்குமிடம் தேடி ஒளிசெய்யும் முழு மதியம் இன்று வந்தால் எவ்வாறு வருத்துமோ, நான் இனி ஆற்ற மாட்டேன், காண். எ.று.

     தலை - மண்டையோடு. தலையோட்டை உண்பலியேற்கும் கலமாகக் கொண்டது பற்றி “தலையே கலனாக” என்றும், தாளம் ஒத்து வர நடிப்பது விளங்க, “செறித்து நடிக்கும் திருக்கூத்தர்” என்றும் இயம்புகிறாள். தலையே கலனாகத் தீர்ந்தார் என இயைத்துக் கொள்க. பிற கலங்களை நீக்கித் தலையோட்டையே கலமாக வரைந்து கொண்டமையால் “தலையே கலனாகத் தீர்ந்தார்” என்றாள். தீர்தல்: ஈண்டு வரைந்து கோடற் பொருட்டு. தாளம் ஒத்து வர நடித்தல் முறையாகலின் “செறித்து நடிக்கும் கூத்தர்” என்று இயம்புகிறாள். செறித்தல் - ஒத்தறுத்தல். படைத்தல் முதலிய ஐந்தொழிலும் நடைபெற நடிக்கும் அருட் கூத்தாதலால், “திருக்கூத்தர் எனச் சிறப்பிக்கின்றாள். தேர்ந்தார் - மெய்யுணர்வுடைய மேலோர். சிவனது பரமாந்தன்மையை யுணர்ந்தோர் அவனையன்றி மறந்தும் வேறொன்றும் நினையாமல் அவன் திருவடியையே சூழ்ந்து திரிவது பற்றி, “தேர்ந்தார் தம்மைப் பித்தடையச் செய்வார்” எனக் கூறுகிறாள். பித்து - பேராசை. தன்னைப் பரவுவோருள்ளத்தில் ஆசை மிகுவித்துத் தன்னையே சூழ்ந்து திரியச் செய்வதனால் சிவனுக்குப் “பித்தன்” என்பதும் ஒரு பெயராயிற்று. “என் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத் தரும் பெருமான்” (அடைக்) என மணிவாசகரும் “பின்றானும் முன்றானுமானான் தன்னைப் பித்தர்க்குப் பித்தனாய் நின்றான் தன்னை” (நீடூர்) எனத் திருநாவுக்கரசரும் உரைப்பன காண்க. காதற் கூட்டம் நல்கினாரில்லை என்றற்குச் “சேர்ந்தாரல்லர்” என்று கூறுகிறாள். மதியம், ஈண்டு முழு மதியின் மேற்று. தான் இருக்குமிடங்களில் காணத் தோன்றுதலால் “என்னைத் தேடி வரும் தீமதியம்” எனவும், காமநோய் உற்றார்க்கு வெண்மதியின் தண்ணிலவு வெம்மை செய்தலால், “தீமதியம்” எனவும், ஆற்றாமை விளங்கச் “சார்ந்தால் அதுதான் என்செயுமோ” எனவும் இயம்புகிறாள். வெண்மதியின் வெம்மைக் கஞ்சியவாறு.

     (10)