1665. ஆயும் படிவத் தந்தணனாய்
ஆரூ ரன்தன் அணிமுடிமேல்
தோயும் கமலத் திருவடிகள்
சூட்டும் அதிகைத் தொன்னகரார்
ஏயும் பெருமை ஒற்றியுளார்
இன்னும் அணையார் எனைஅளித்த
தாயும் தமரும் நொடிக்கின்றார்
சகியே இனிநான் சகியேனே.
உரை: தோழி, ஆயத்தகும் உருவமுடைய வேதியனாய்ப் போந்து சித்தவட மடத்திற்றங்கிய நம்பியாரூரருடைய அழகிய தலையின்மேல் தாமரைபோலும் திருவடிகளைத் தீண்டிப் பொருந்துமாறு செய்த திருவதிகைப் பதியையுடையவரும், பெருமை பொருந்திய திருவொற்றியூரிலுள்ள வருமான தியாகப் பெருமான் இனனமும் வந்து என்னைக் கூடினாரில்லை; அதனால் யானுற்ற வேறுபாடு கண்ட என்னைப் பெற்ற தாயும் சுற்றத்தாரும் இகழ்ந் தேசுகின்றார்கள்; இனிமேல் யான் சிறிதும் ஆற்றேன், காண். எ.று.
முதுமைத் தோற்றத்தில் காண்பார் அறிவைப் பணி கொள்ளும் வகையில் வேதியனாய்த் தோன்றினமையின், “ஆயும் படிவத் தந்தணானாய்” என்றும், சித்தவடமடத்திற் படுத்துக் கிடந்த நம்பியாரூரர் தலைமேல் தமது திருவடி பொருந்தத் தாமும் கிடந்தாராகலின், அச் செய்தியை, ஆரூரன்றன் அணிமுடிமேல் தோயும் கமலத்திருவடிகள் சூட்டும் அதிகைத் தொன்னகரார்” என்றும் புகல்கின்றாள். திருமணக் கோலத்துடன் திருந்திய முடியை யுடையராகலின், நம்பியாரூரர், தலையை “அணிமுடி” எனவும், எங்கும் எப்பொருளிலும் கலந்துறையும் பரமன் திருவடியாதலும் விளங்கத் “தேயும் கமலத் திருவடிகள்” எனவும் சிறப்பிக்கின்றாள். அதிகைப் பதியின் எல்லைக் கண்ணதாதலால், “அதிகைத் தொன்னகரார்” என்று சொல்லுகிறாள். ஏய்தல் - பொருந்துதல். அணைதல் - காதலாற் கூடுதல். நொடித்தல் - சொல்லுதல். ஈண்டு இகழ்ந்து பேசுதல் மேற்று; சுளித்து நோக்கிப் பேசுதலுமாம். (11)
|