1668. அனத்துப் படிவம் கொண்டயனும்
அளவா முடியார் வடியாத
வனத்துச் சடையார் திருஒற்றி
வாணர் பவனி வரக்கண்டேன்
மனத்துக் கடங்கா தாகில்அதை
வாய்கொண் டுரைக்க வசமாமோ
இனத்துக் குவப்பாம் அவரழகை
என்னென் றுரைப்ப தேந்திழையே.
உரை: ஏந்திழையாகிய தோழி, அன்னப் புள்ளின் வடிவுற்றுப் பறந்து முயன்றும் பிரமனாலும் அளக்க முடியாத திருமுடியையுடையவரும், குறையாத கங்கையாற்றைத் தாங்கும் சடையை யுடையவரும், திருவொற்றியூரில் எழுந்தருள்பவருமாகிய தியாகப் பெருமான் திருவுலா வரக்கண்டேன்; ஆங்கே உயிரினத்துக்கு இன்பம் தரும் அவரது பேரழகு மனவெல்லைக்குள் அடங்கா தெனில், வாயாலுரைக்கும் அளவினதாகாது; ஆகவே, அதனை என்னென்பது? எ.று.
அன்னம் - அனம் என வந்தது. படிவம் - உருவம். திருமாலொடு மாறுபட்டுத் திருமுடி காணலுற்ற பிரமன் அன்னப் புள்ளின் உருக் கொண்டு முயன்று மாட்டானாயினமையின், “அனத்துப் படிவம் கொண்டயனும் அளவா முடியார்” எனவுரைக்கின்றாள். வடியாத வுனம் - குறையாத நீராகிய கங்கை. கங்கை நிறைந்து தங்கும் சடையுடைமையின், “வடியாத வனத்துச் சடையார்” என வழுத்துகின்றாள். இனம் - மக்களினமும் தேவரினமும் எனக் கொள்ளினும் அமையும். பேரழகு மனம் மொழிகளின் எல்லையிறந்ததாகலின், “மனத்துக் கடங்காதாகிலதை வாய்கொண் டுரைக்க வசமாமோ” என மொழிகின்றாள்.
இதனால், தியாகப் பெருமாள் திருவுலாக் கோலம் மனமொழிகளின் எல்லை கடந்த தென்பதாம். (3)
|