பக்கம் எண் :

1671.

     சொல்லுள் நிறைந்த பொருளானார்
          துய்யர் உளத்தே துன்னிநின்றார்
     மல்லல் வயற்சூழ் திருஒற்றி
          வாணர் பவனி வரக்கண்டேன்
     கல்லும் மரமும் ஆனந்தக்
          கண்ணீர் கொண்டு கண்டதெனில்
     எல்லை யில்லா அவரழகை
          என்னென் றுரைப்ப தேந்திழையே.

உரை:

      ஏந்திழையாகிய தோழி, சொற்றோறும் பொருளாய் நிறைந்தவரும், தூய சான்றோர் மனத்தின்கண் இருப்பவரும், வளவிய வயல்கள் சூழ்ந்துள்ள திருவொற்றியூரில் எழுந்தருள்பவருமாகிய தியாகப் பெருமான், உலா வரக்கண்டேன்; அப்பொழுது அப்பெருமானைக் கல்லும் மரமுமாகிய எல்லாம் உவகைக் கண்ணீர் பெருகக் கண்டு இன்புற்றன வென்றால், எல்லையில்லாத அவரது பேரழகை என்னென்பது. எ.று.

     சொல்லும் பொருளும் பேதமும் அபேதமுமின்றிப் பேதாபேத சம்பந்த முடையன என்று அறிஞர் கூறுதலால், “சொல்லுள் நிறைந்த பொருளானார்” என உரைக்கின்றாள். சொல்லைச் சத்தியெனவும், அதன் கண் நிறைந்த பொருளைச் சத்திமானாகிய சிவனென்றும் சைவவாதிகள் உரைப்பர்: “என்னை யிகழ்ந்தனனோ சொல் வடிவாய் நின்னிடம் பிரியா விமயப் பாவை, தன்னையும் சொற்பொருளான உன்னையுமே இகழ்ந்தனன்” (இடைக்) எனப் பரஞ்சோதியார் பகர்கின்றார். நெஞ்சம் துயராய் வழிபட்டொழுகும் சான்றோர் உள்ளத்தில் இறைவன் எழுந்தருளுகிறானென்பது பற்றி, “துய்யர் உளத்தே துன்னி நின்றார்” என்று சொல்லுகின்றாள். “கள்ள நெஞ்ச வஞ்சகக் கருத்தைவிட் டருத்தியோடு, உள்ள மொன்றி யுள்குவார் உளத்துளான்” (ஆரூர்) என ஞானசம்பந்தர் ஓதுகின்றார். மல்லல் - வளம். காண்பவர் உள்ளத்தை மகிழ்வித்துக் கண்ணீர் சொரிவிக்கும் தன்மை அழகுக்கு உண்மை பற்றி, “கல்லும் மரமும் ஆனந்தக் கண்ணீர் கொண்டு கண்டது” என்கிறாள். சீதையின் அழகை வியந்துரைக்கும் கம்பர், “சொல்லும் தன்மைத் தன்றதுதிண்குன்றும் சுவரும், மண் கல்லும் புல்லும் கண்டுருகப் பெண் கனி நின்றாள்” என்பது காண்க. அழகன் என்ற பெயரினனாதலால், சிவனதழகை “எல்லையில்லா அவரழகு” எனச் சுட்டிக் கூறுகின்றாள்.

     இதனாற், பேரழகு கண்ட அஃறிணைப் பொருள்களும் இன்பக் கண்ணீர் பெருக்குகின்றன என வியந்தவாறாம்.

     (6)