1673. கலக அமணக் கைதவரைக்
கழுவி லேற்றுங் கழுமலத்தோன்
வலகை குவித்துப் பாடும்ஒற்றி
வாணர் பவனி வரக்கண்டேன்
உலக நிகழ்வைக் காணேன்என்
உள்ளம் ஒன்றே அறியுமடி
இலகும் அவர்தந் திருஅழகை
என்னென் றுரைப்ப தேந்திழையே.
உரை: ஏந்திழையே, கலகம் விளைவிக்கும் அமண நெறி நின்ற வஞ்சகர் கூட்டத்தைப் பாண்டியன் கழுவில் ஏற்றற்கு ஏதுவாயிருந்த சீர்காழித் திருஞானசம்பந்தர், வலிய கைகளைக் குவித்துப் பாடிப் பரவும் திருவொற்றியூர்த் தியாகப் பெருமான் திருவுலா வரக் கண்டேன்; அப்பொழுது சூழத் தோன்றி உலகியல் நிகழ்ச்சிகளைக் காணேனாயினேன்; என்னுடைய மனமொன்றுதான் அவரைக் கண்டது; விளங்குகின்ற அவருடைய பேரழகை என்னென மொழிவேன். எ.று.
ஆயிரத்து முந்நூறு ஆண்டுகட்குமுன் தமிழகத்தில் சமண சமயத்தவர் செய்த பிரசாரத்தால் சமய வாழ்வில் அமைதி குலைந்திருந்தமையின், அவர்களைக் “கலகவமணக் கைதவர்” என்று மொழிகின்றாள். கைதவர் - வஞ்சகர். சமயப் போரில் தாம் எய்திய தோல்வி கண்டு மானம் பொறாது சமணர் தாமே கழுவேறினாராயினும், அப்போரில் வென்றுயர்ந்தமையால் திருஞானசம்பந்தர் மேலேற்றிச் சமணரை அவர் கழுவேற்றினார் எனச் சிலர் உரைத்தமையின், “கழுவிலேற்றும் கழுமலத்தோன்” என்று கூறுகிறாள். கழுமலத்தோன் - கழுமலம் என்ற பெயரையுடைய சீர்காழியில் தோன்றிய திருஞானசம்பந்தர். வல்லகை - எதுகை நோக்கி வலகை என வந்தது. இறைவன் திருமுன்னர்க் கைகுவித்து நின்று வாயாற் பாடினமை விளங்க, “வலகை குவித்துப் பாடும் ஒற்றி வாணர்” என மொழிகின்றாள். பாடும் ஒற்றிவாணர் - பாடுதற்குப் பொருளாகிய ஒற்றிவாணர். பொறி புலன்கள் ஒடுங்க மனமொன்றே தியாகரது பேரழகில் தோய்ந்து ஒன்றினமையால், “உலக நிகழ்வைக் காணேன் என் உளமொன்றே யறியுமடி” என்று உரைக்கின்றாள். எங்கும் எப்பொருளிலும் கலந்து ஒளிர்வதாகலின், “இலகும் அவர்தம் திருவழகு” எனச் சிறப்பிக்கின்றாள். வியப்பு மேலீட்டால், “என்னென்றுரைப்பது” என்கின்றாள்.
இதனால், உலகை மறந்து உள்ளத்தால் ஒன்றித் தியாகேசர் பேரழகை நங்கை கண்டு வியந்தவாறாம். (8)
|