பக்கம் எண் :

1677.

     பெற்றி அறியாப் பிரமனுக்கும்
          பெரிய மாற்கும் பெறஅறியார்
     புற்றின் அரவார் கச்சைஉடைப்
          புனிதர் என்னைப் புணரும்இடம்
     தெற்றி மணிக்கால் விளங்குதில்லைச்
          சிற்றம் பலமோ அன்றிஇந்த
     ஒற்றி நகரோ சோதிடம்பார்த்
          துரைப்பீர் புரிநூல் உத்தமரே.

உரை:

     முந்நூலணிந்த வேதியரே, இறைவன் தன்மையையறியாத பிரமதேவனுக்கும் பெருமையையுடைய திருமாலுக்கும் பெறற்கரியவரும், புற்றில் வாழும் பாம்பைக் கச்சாகவணிந்த தூயவருமான தியாகப் பெருமான், என்பாற் போந்து கூடுதற்குப் பொருந்திய இடம் மணிகள் இழைத்த கால்கள் நிறுத்தப்பட்ட மேடையாற் பொலிய தில்லைச் சிற்றம்பலமோ, அல்லது இந்தத் திருவொற்றியூரோ ஒரு சோதிடம் பார்த்து எனக்குக் கூறுமின். எ.று.

     பெற்றி - தன்மை. “பெற்றி பிறர்க்கரிய பெம்மான்” (அம்மா) என்பது திருவாசகம். “தன்மை யாரும் அறிவாரில்லை” (ஐயா) என்பர் ஞானசம்பந்தர். பெருமையுடைமை தோன்றப் “பெரிய மால்” எனப் பேசுகின்றாள். ஞானத்திருவாய் விளங்குதலால், “பெற வரியார்” எனக் கூறுகிறாள். தோலாடை நெகிழா வண்ணம் கச்சணிய வேண்டுதலின், சிவபிரான் பாம்பைக் கச்சாக அணிகிறான் என்பாளாய், “புற்றினரவார் கச்சையுடைப் புனிதர்” என்று புகல்கின்றாள். தெற்றி - மேடை; இதுவே அம்பலம் எனப்படுகிறது. தில்லைப் பெருங்கோயிலில் உளதாகலின், “தில்லைச் சிற்றம்பலம்” எனச் சிறப்பிக்கப்படுகிறது. ஒற்றி நகர் - திருவொற்றியூரிலுள்ள திருக்கோயில்.

     இது புணர்தற்கேற்ற ஊர் வினாவியது.

     (2)