பக்கம் எண் :

1684.

     ஆர்த்து மலிநீர் வயல்ஒற்றி
          அமர்ந்தார் மதியோ டரவைமுடிச்
     சேர்த்து நடிப்பார் அவர்தமைநான்
          தேடி வலியச் சென்றிடினும்
     பார்த்தும் பாரா திருப்பாரோ
          பரிந்து வாஎன் றுரைப்பாரோ
     ஓர்த்து மதிப்பீர் சோதிடம்பார்த்
          துரைப்பீர் புரிநூல் உத்தமரே.

உரை:

      முந்நூலணிந்த வேதிய உத்தமர்களே, ஒலித்துக் கொண்டு பாய்ந்து மிகும் நீர்வளமுடைய வயல்களையுடைய திருவொற்றியூரின்கண் எழுந்தருள்பவரும், பிறைமதியுடன் பாம்பைச் சடையில் முடித்துக் கொண்டு அம்பலத்தில் ஆடுபவருமான தியாகப் பெருமானை நானே தேடி வலிய அடைந்தாலும் என்னைப் பார்த்தும் பாராதவர்போல் இருப்பாரோ, அன்பு கூர்ந்து வருக எனச் சொல்லுவாரோ, ஒரு சோதிடம் பார்த்து நிகழ்வ தாராய்ந்து மதிப்பிட் டுரைப்பீர்களாக. எ.று.

      ஆர்த்தல் - ஒலித்தல். நீர் மிக்கு முடுகிப் பாயுங்காற் சலசல வென்றொலித்தலின், “ஆர்த்து மலிநீர்” என வுரைக்கின்றாள். அமர்தல் - விரும்பி யுறைதல். முடிச்சடையில் பிறையும் பாம்பும் இருத்தலால், “மதியோடரவை முடிச் சேர்த்து நடிப்பார்” என இயம்புகிறாள். நடிக்குமிடமாகிய அம்பலம் வருவிக்கப்பட்டது. “கிழவோற் சேர்தல் கிழத்திக்கில்லை” (தொல். பொ. பொரு. 9) என்பது ஐந்திணைத் தலைவிக் காதலாதலால், ஈண்டுப் பெருந்திணை நங்கை அவ்வரம்பு கடந்து, “நான் தேடி வலியச் சென்றிடினும்” என வுரைக்கின்றாள். காம மிக்குக் கழிபடர் உறினும் பெண்மை இடை நின்று தடுப்பது தோன்றச் “சென்றிடினும்” எனக் கூறுகின்றாள். வலியச் சேறல் நன்றாகாமை நோக்கிப் புறக் கணிப்பாரோ என்று நினைத்தலால், “பார்த்தும் பாராதிருப்பாரோ” எனவும், அருளொழுகும் கண்ணுடையராதலால் பார்த்து என்பால் அருள் கொண்டு வருக என்னலாம் என்ற நினைவால், “பரிந்து வா என்றுரைப் பாரோ” எனவும் இசைக்கின்றாள். ஓர்ந்தென்பது எதுகை பற்றி வலித்தது. மதித்தல் - எண்ணியறிதல்.

     இது புறக்கணிப்பாரோ என ஐயுற்று வினாவுவது.

     (9)