பக்கம் எண் :

1687.

     கருவாழ் வகற்றும் கண்நுதலார்
          கண்ணன் அயனும் காண்பரியார்
     திருவாழ் ஒற்றித் தேவர்எனும்
          செல்வர் அவரே செல்வமதில்
     பெருவாழ் வுடையார் எனநினைத்தாய்
          பிச்சை எடுத்த தறிந்திலையோ
     இருவா மயல்கொண் டெதுபெறுவாய்
          ஏழை அடிநீ என்மகளே.

உரை:

      என் மகளே, கருவுற் றெய்தும் பிறவியை அறுக்கும் கண்ணுதற் கடவுளும், திருமாலும் பிரமனும் காண்டற் கரியவரும், செல்வம் பொருந்திய திருவொற்றியூரில் எழுந்தருளும் தேவருமாகிய தியாகப்பெருமான் என்னும் அருட்செல்வர், செல்வ முடைமையாற் பெருவாழ் வுடையவரென நினைக்கின்றாய்; அவர் ஊர்தொறும் பிச்சை யெடுத்ததை நீ அறியாய்; அதனால் நீங்காத மயக்கமுற்றுப் பெறலாகும் பயன் ஒன்றுமில்லை காண்; நீ ஏழையாவாய். எ.று.

     கரு வாழ்வு - தாயின் கருவிற்றோன்றி மண்ணிற் பிறந்து வாழும் வாழ்வு. “பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்” என்று பெரியோர் கூறுதலால், “கருவாழ்வகற்றும் கண்ணுதலார்” எனப் புகழ்கின்றாள். கண்ணுதல் - கண் பொருந்திய நெற்றி. கண்ணன் - கரிய மேனியையுடைய திருமால். திருமாலும் பிரமனும் முறையே சிவத்தின் அடியும் முடியும் காணாராயினமை பற்றி, “கண்ணன் அயனும் காண்பரியார்” என வுரைக்கின்றாள். கண்ணனும் என, உம்மை விரித்துக் கொள்க. செல்வ வளம் மிக்கிருப்பது விளங்க, “திருவாழ் ஒற்றி” எனச் சிறப்பிக்கின்றார். தேவரெனும் செல்வர் - திருவொற்றியூர்த் தேவரெனச் சிறப்பித் துரைக்கும் திருவருட் செல்வர். பொருளுடையவர் பெருவாழ்வு பெறுவர் என்னும் உலகநெறி பற்றி, “செல்வமதில் பெருவாழ்வுடையார் என நினைத்தாய்” என்று கூறுகிறாள். பிறர் மனைகட்குச் சென்று உண்பலி இரப்பவர் பெருவாழ்வுடையராகார் என்றற்குப் “பிச்சை யெடுத்த தறிந்திலையோ” எனப் பேசுகின்றாள். தாருக வன மகளிர் மனைகட்குப் பிச்சைத் தேவராய்ச் சென்றிரந்ததும், நாவுக்கரசர் நம்பியாரூரர் பொருட்டுச் சோறிரந்ததும் வரலாறாதலின், “பிச்சையெடுத்தது” என எடுத்தோதுகின்றாள். இருவா மயல் - நீங்காத வேட்கை மயக்கம்; இருத்தற்கில்லாத மயல் எனவுமாம். இரியா மயல், எதுகை நயம் பற்றி “இருவா மயல்” என்றாயிற்று என்றுமாம். உனது வேட்கை பயனற்றது என்பதாம்.

     (2)