பக்கம் எண் :

1695.

     உள்ளி உருகும் அவர்க்கருளும்
          ஒற்றி நகர்வாழ் உத்தமர்க்கு
     வெள்ளி மலையும் பொன்மலையும்
          வீடென் றுரைப்பார் ஆனாலும்
     கள்ளி நெருங்கிப் புறங்கொள்சுடு
          காடே இடங்காண் கண்டறிநீ
     எள்ளில் மயல்கொண் டெதுபெறுவாய்
          ஏழை அடிநீ என்மகளே.

உரை:

      என் மகளே, நினைந்துருகும் மெய்யன்பர்க்குப் பேரருள் வழங்கும் திருவொற்றியூர் உத்தமராகிய சிவபெருமானுக்கு வெள்ளி மலையும் பொன்மலையும் சிறந்த இடம் எனப் புராணிகர் உரைப்பாராயினும், கள்ளிகள் வளர்ந்தடர்ந்த ஊர்ப்புறத்தாகிய சுடுகாடே இடம் என்று காண்க; அவர்பால் தூய காதல் வேட்கை கொள்ளினும், எப்பயன் பெறுவாய்; பயனின்மை யுணராமையால் நீ ஏழையாவாய். எ.று.

     நினைப்பவர் நினைக்கும்தோறும் இன்பம் செய்தலால், “உள்ளியுருகு மவர்க்கருளும் ஒற்றிநகர் வாழ் உத்தமர்” எனப் பரவுகின்றாள். “நினைவார் நினைய இனியான்” (புறவம்) என்பர் ஞானசம்பந்தர் வெள்ளி மலை - கயிலாயம். பொன்மலை - மேருமலை. குறிஞ்சியும் முல்லையும் நிலைமை திரிந்த பாலைநிலப் பகுதியில் வளரும் முள்ளுடையது கள்ளி. நெருங்க வளர்ந்து தம்மில் அடர்ந்து காடு போல் தோன்றுதலால் கள்ளிக்காடு என்பர். ஊர்ப்புறத்தே பிணங்களைச் சுடுதற்கென ஒதுக்கப்படுவது சுடுகாடு; இங்கே கள்ளியும் காரையுமாகிய முள்ளுடைய மரஞ்செடிகள் வேலியாக அமைந்திருக்கும். இதனையே பேய்க்கணம் சூழச் சிவன் தனக்கு ஆடிடமாகக் கொள்வதுபற்றி, “கள்ளி நெருங்கிப் புறங்கொள் சுடுகாடே இடம் காண்” என வுரைக்கின்றாள். “கோயில் சுடுகாடு கொல் புலித்தோல் நல்லாடை” (சாழல்) எனத் திருவாசகம் உரைப்பது காண்க. யாவராலும் இகழப்படாத தூய காதல் என்றற்கு “எள்ளில் மயல்” என இயம்புகிறாள். அச்சம் நிலவுமிடத்தில் காதலன்பு பிறவாதாகலின், “எது பெறுவாய் ஏழையடி நீ” எனச் செவிலி எடுத்தோதுகின்றாள்.

     (10)