பக்கம் எண் :

1697.

     பெருமை உடையார் மனைதொறும்போய்ப்
          பிச்சை எடுத்தார் ஆனாலும்
     அருமை மணியார் அம்பலத்தில்
          ஆடித் திரிந்தார் ஆனாலும்
     ஒருமை உடையார் கோவணமே
          உடையாய் உடுத்தார் ஆனாலும்
     கருமை விழியாய் நான்அவர்மேல்
          காதல் ஒழியேன் கனவினுமே.

உரை:

      கரிய கண்களை யுடையவளே, பெருமையுடையவராகிய தியாகப்பெருமான் வீடுதோறும் சென்று பிச்சை யெடுப்பவராயினும், பெறற்கரிய மணிகள் இழைத்த அம்பலத்தேறி நின்றாடித் திரிகின்றார் எனப்படினும், ஒருவனாம் தன்மையுடன் கோவணத்தையே உடையாக உடுப்பவராயினும் அவர்மேற் கொண்ட காதலன்பைக் கைவிடேன், காண். எ.று.

     கருமை விழி - கரிய கண்; கரிய மைதீட்டிய கண்ணென்றுமாம். எல்லாப் பெருமையும் உடையராதலின், “பெருமையுடையார்” என்று கூறுகிறாள். “பெருவாழ்வுடையார் என நினைத்தாய் பிச்சையெடுத்த தறிந்திலையோ” (1687) என்று செவிலி யுரைத்தாளாகலின், “மனை தொறும் போய்ப் பிச்சையெடுத்தாரானாலும்” என்று இசைக்கின்றாள். பெருமையுடையார் மனைதொறும் என இயைத்துக் கற்புப் பெருமை கொண்ட மகளிர் மனைதோறும்” எனவுரைப்பினும் அமையும். உயர்ந்த மணிகளைக் கொண்டு வேந்தர்களால் அமைக்கப் பெற்றதாகலின் பொன்னம்பலத்தை “அருமை மணியார் அம்பலம்” எனப் புகழ்ந்தோதுகிறாள்; 'பெறற்கரும் மாணிக்கமணி போல்பவராகிய சிவபெருமான் என்றலும்' பொருந்தும். “நாடி நடிப்பார் நீயுமுடன் நடித்தால் உலகர் நகையாரோ” (1684) எனச் செவிலி கழறினமையின், “அம்பலத்தில்ஆடித் திரிந்தாரானாலும்” என மறுக்கின்றாள். நடிப்பது பொன்னம்பலமாதலால் “அருமை மணியார் அம்பலம்” என உயர்த்துக் கூறுகின்றாள். ஆண்மையும் பெண்மையும் கலந்த உருவினராயினும், ஒருவரென்னும் தன்மை திரியாமைபற்றி, “ஒருமையுடையார்” எனவுரைக்கின்றாள். “ஒருமை பெண்மை யுடையன்” என ஞான சம்பந்தரும், “நீல மேனி வாலிழை பாகத்து ஒருவன்” எனப் பாரதம் பாடிய பெருந்தேவனாரும் உரைப்பன காண்க. கோவணமேயுடையார் என்பதில், உடையார், உடையாகக் கொண்டுடுப்பவர் எனப் பொருள்படும். “கட்டத் துணியும் கிடையாது கந்தையுடுத்த தறிந்திலையோ” (1688) எனச் செவிலி யுரைத்ததைத் கொண்டெடுத் துரைத்தலால், “கோவணமே யுடையாய் உடுத்தாரானாலும்” என இயம்புகிறாள். கொண்டுரை காதற் சிறப்பையும், “ஆனாலும் காதலொழியேன் கனவினுமே” என்பது கதவா மாண்பையும் காட்டுவ தறிக.

     (2)