பக்கம் எண் :

1698.

     எல்லாம் உடையார் மண்கூலிக்
          கெடுத்துப் பிழைத்தார் ஆனாலும்
     கொல்லா நலத்தார் யானையின்தோல்
          கொன்று தரித்தார் ஆனாலும்
     வல்லார் விசையன் வில்அடியால்
          வடுப்பட் டுவந்தார் ஆனாலும்
     கல்லாம் முலையாய் நான்அவர்மேல்
          காதல் ஒழியேன் கனவினுமே.

உரை:

      எல்லாம் உடையராகிய சிவபெருமான் மதுரையில் கூலியாளாக மண் சுமந்து தவறுசெய்து அடியுண்டாராயினும், கொல்லா விரதமுடையராகியும், யானையைக் கொன்று அதன் தோலையுரித்துப் போர்த்துக் கொண்டாராயினும், எல்லாம் வல்லவராய் அருச்சுனன் கைவில்லால் அடிபட்டு மேனியில் தழும்பு பட்டாராயினும், மலைபோன்ற கொங்கைகளையுடைய தோழி, கனவினும் யான் அவர் மேலுற்ற காதலன்பை மறந்தொழியேன், காண். எ.று

     எல்லா வகைச் செல்வங்களையுமுடையவர் தியாகப்பெருமான் எனப் படுவதால், “எல்லாம் உடையார்” எனப் போற்றி, இப்பெற்றியவர், மதுரையில் வந்தி யென்ற பிட்டுவாணிச்சியின் அன்புக்கிசைந்து வையைக் கரையில் அவ் வந்தி கூலியாகத் தந்த பிட்டை யேற்றதும், கூலியாகியபோது மண்ணை முறைப்படி கொட்டிப் பணி செய்யாத குற்றத்துக்காக வேந்தனால் பிரம்படிபட்ட வரலாறும் புலப்பட, “மண் கூலிக்கு எடுத்துப் பிழைத்தாரானாலும்” எனத் தன் காதன்மை தோன்றக்கட்டுரைக்கின்றாள். பிழைத்தல் - தவறாகச் செய்தல். “கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண் சுமந்து கூலி கொண்டக் கோவால் மொத்துண்டு, புண் சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்” (அம்மா) என்பது திருவாசகம். கொல்லா நலம் - கொல்லா விரதம். Êசிவநெறி எவ்வுயிரையும் கொல்லா நெறியாதலால், “சிவனைக் கொல்லா நலத்தார்” என்று புகழ்கின்றார். “கொல்லா நெறியார் அவர்தம்மைக் கூடியுடலம் குளிர்ந்தனையே” (1599) என வள்ளற் பெருமான் கூறுதல் காண்க. யானை - யானை முகம் பெற்ற கயாசுரன். ஏனையுயிர்களைக் கொன்று திரிந்த கயாசுரனைக் கொன்று உயிர்புரந்த சிவன் செயலை, “யானையின் தோல் கொன்று தரித்தாரானாலும்” எனக் குறிக்கின்றாள். கொல்லாக் கொள்கை கொண்டவர், அதற்கு மாறாக யானையைக் கொன்று தோலையுரித்தார் என இகழ்ந்தமை காட்டியவாறு. எல்லாம் வல்லவர் எனப்படுபவர், பாண்டவரினத்து அருச்சுனன் கைவில்லால் அடிபட்டு அதற்கு வருந்தாமல் மனமகிழ்ந்தார் என இகழ்ந்ததைக் கொண்ட செயலைக் கூறுவாள், “வல்லார் விசயன் வில்லடியால் வடுப்பட்டு உவந்தா ரானாலும்” என மொழிகின்றாள். கல் - ஈண்டு மலை குறித்து நின்றது. “கல்லுயர் நனந்தலை” (குறுந். 297) என்பது காண்க. காதலொழியேன் என்பது காதற் சிறப்பு.

     (3)