பக்கம் எண் :

1706.

     கோதே மருவார் மால்அயனும்
          குறியா நெறியார் என்றாலும்
     சாதே மகிழ்வார் அடியாரைத்
          தம்போல் நினைப்பார் என்றாலும்
     மாதே வருக்கும் மாதேவர்
          மௌன யோகி என்றாலும்
     காதேர் குழையாய் நான்அவர்மேல்
          காதல் ஒழியேன் கனவினுமே.

உரை:

      காதுக் கழகு செய்யும் குழையை யுடையவளே, குற்றமே யில்லாத தியாகப் பெருமான், திருமாலும் பிரமனும் கருதாத ஞான நெறிக்கண் நிற்பவரெனப் பிற மகளிர் பேசினும், சாதுத் தன்மையை விரும்பும் அவர், அடியார்களைத் தம்மைப்போற் கருதிப் பேணுபவர் எனப்படினும், பெரிய தேவர்கட் கெல்லாம் பெரிய தேவராய் மவுனி யோகியாய் விளங்குபவர் என்று மொழிந்தாலும், நான் அவர்மேற் கொண்ட காதலைக் கனவினும் கையொழியேன். எ.று.

      காதணியாக மகளிரால் விரும்பப்படுவது பற்றி, “காதேர் குழை” எனச் சிறப்பிக்கப்படுகிறது. கோது - குற்றம். மருவுதல் - பொருந்துதல். குறித்தல் - கருதுதல். திருமாலும் பிரமனும் ஞானம் வேண்டித் தவம் புரிந்த வரலாறு இன்மையின், “மாலயனும் குறியா நெறியார்” என்று கூறுகிறார்கள். சாது - சாதுவாம் தன்மை; சாந்தம் மேவும் ஞான நிலையுமாம். “சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே” (பாசுரம்) என ஞானசம்பந்தர் பாடுவதறிக. தன்னையடைந்த அடியார்களைத் தன்னின் வேறாகக் கருதாமல் இன்பமளிக்கும் இயல்புடையனாதலின், “அடியாரைத் தம்போல் நினைப்பார்” எனப் புகல்கின்றனர். “சேர்வார் தாமே தானாகச் செயுமவன்” (கழுமல) எனத் திருஞானசம்பந்தர் கூறுவர். பிரமன் திருமால் முதலியோர் மாதேவர் எனப்படுதலால், அவர்க்கெலாம் பெரிய தேவனாதலால், “மாதேவருக்கும் மாதேவர்” என்கின்றனர். “யாதோர் தேவர் எனப்படுவார்க் கெலாம், மாதேவன்னலால் தேவர் மற்றில்லையே” (ஆதிபுர) என நாவுக்கரசர் நவில்வது காண்க. உயிர்கள் யோகமுத்தி பெறல் வேண்டித் தான் யோகியாதலை நினைந்து, “மௌனயோகி என்றாலும்” என வுரைக்கின்றாள். “யோகியாய் யோக முத்தி யுதவுதலதுவு மோரார்” (சிவ. சித். 1 : 50) என அருணந்தி சிவனார் கூறுகின்றார். இங்ஙனம் பிற மகளிர் புகழ்வது போலும் பழிக்கினும் நான் அவர்மேற் கொண்ட காதலைக் கனவினும் கைவிடேன் என வற்புறுத்தியவாறாம்.

     (11)