171. தணிகை மேவிய சாமியே நினை
எணிகை விட்டிடேல் என்று தோத்திரம்
அணிகை நின்னடிக் கயர்ந்து நின்றுவீண்
கணிகை போலெனைக் கலக்கிற் றுள்ளமே.
உரை: தணிகைப் பதியில் எழுந்தருளும் முருகப் பெருமானே, உன்னை நினைந்து எளியேனைக் கைவிடாதே என்று துதி மாலைகளை நின்னுடைய திருவடிக்குச் சூட்டுவதை மறந்து வீண் காலம் போக்கி எனது உள்ளம் கணிகை மகள் போல என்னைக் கலக்குவதாயிற்று, காண், எ. று.
சாமி - முருகப் பெருமான். எதுகை பற்றி, எண்ணி எனற்பாலது எணி எனக் குறைந்தது; ககர வொற்றும் தொக்கது. தோத்திரம் - துதிபாடும் சொல்மாலை. அணிகை-அணிதல்; சூட்டுதலுமாம். அயர்தல்-மறத்தல். கணிகை-கணப் போதில் மனம் மாறுபவள். கணிகைப் பெண் பொருள் தந்த வழி உவத்தலும், தாராதவிடத்துக் காய்தலும் செய்தல் போல மகிழ்தலும் வருந்துதலும் செய்தலால் “உள்ளம் கணிகை போல் எனைக் கலக்கிற்று” என்று கூறுகிறார்.
இதனால் இன்பக் காலத்தில் மறத்தலும் துன்பக் காலத்தில் இறைவனை நினைத்தலும் மாறி மாறிச் செய்யும் மனத்தின் இயல்பு கூறியவாறாம். (21)
|