1717. மாழை மலையைச் சிலையாக
வளைத்தார் அன்பர் தமைவருத்தும்
ஊழை அழிப்பார் திருஒற்றி
ஊரர் இன்னும் உற்றிலர்என்
பாழை அகற்ற நான்செலினும்
பாரா திருந்தால் பைங்கொடியே
ஏழை அடிநான் என்செய்வேன்
என்னை மடவார் இகழாரோ.
உரை: பசுமையான கொடி போன்ற தோழி, பொன் மலையை வில்லாக வளைத்துக் கொண்டவரும், தன்பால் அன்பு கொண்டவர்களை உருத்து வந்து வருத்தும் ஊழ்வினையைத் தொடர்பறுத்தவரும், திருவொற்றியூரை யுடையவருமான சிவபெருமான், இன்னமும் என்னிடம் சேர்ந்திலர்; அதனால் என் வேட்கைத் துன்பத்தைப் போக்கற்கு நானே அவர்பாற் சென்றால், அவர் தாமும் என்னை மதித்துப் பாராராயின் ஏழையாகிய யான் என்ன செய்வேன்; இதனைக் காணும் இளமகளிர் என்னை இகழ்ந்து ஏசுவர் காண். எ.று.
பைங்கொடி - பசுமையான பூங்கொடி; தோழி மேற்றாதலின் அன்மொழித் தொகை. மாழை - பொன். திரிபுரம் எரித்த காலைப் பொன்னிற மேருமலையை வில்லாகக் கொண்டது பற்றி, “மாழை மலையைச் சிலையாக வளைத்தார்” என்று நங்கை கூறுகிறாள். அன்பர் - மெய்யன்புடைய அடியார்கள். ஊழ் - பழவினை. அது பிறவி தோறும் தொடர்ந்து நுகர்ந்து கழித்தாலன்றி விடுவதன்மையின், அதன் தொடர்பறுக்கும் வன்மை சிவபெருமான் ஒருவற்கே யுண்மை பற்றி “அன்பர்தமை வருத்தும் ஊழை யழிப்பார்” என வுரைக்கின்றாள். திருவொற்றியூரைத் தனக்கு ஊராகக் கொண்டமை விளங்கத் “திருவொற்றியூரார்” எனவும், அவர் வரவை எதிர் நோக்கியிருந்தமை தோன்ற “இன்னும் உற்றிலர்” எனவும் எடுத்துரைக்கின்றாள். பாழ் - பாழ் செய்யும் வேட்கை நோய். வேட்கை வெம்மை இளமைநலத்தையும் மேனிப்பொலிவையும் கெடுப்பதனால் “பாழ்” எனக் குறிக்கின்றாள். திருவொற்றியூரில் நான் அவர் பாற் சென்றால், என்னை ஏற்காமல் புறக்கணிப்பாரோ என்ற ஐயம் தோன்றி மனத்தை அலைத்தலால், “நான் செலினும் பாரா திருந்தால்” என்று நினைந்து, அதனாற் செயலற் றேங்குவது விளங்க, “ஏழையடி நான் என்செய்வேன்” எனத் துன்புறுகின்றாள். மான வுணர்வு ஒருபால் எழுதலால், எனது நிலையை ஏனை மகளிர் கண்டால் இகழ்ந்து எள்ளுவரென எண்ணி, “என்னை மடவார் இகழாரோ” என்று துயர்கின்றாள். (10)
|