95. காதல் மாட்சி
திருவொற்றியூர்
அஃதாவது
தலைவனது திருவுலாச் செலவு கண்டு நங்கை காதலன்பு மீதூர்ந்து, அதனால் ஈர்ப்புண்டு பின்னே
ஓடுவதும், பெண்மையால் தொடர மாட்டாமை யுறுவதும், செல்கின்றவன் தன்னைத் திரும்பிப்
பார்க்கின் எய்தும் ஊக்கம் அவன் பாராமையாற் குன்றினும் விரைவின் அருமையை
வியந்துரைப்பதும், அவளது காதலன்பை மாண்புறுத்துவதாம். காம வேட்கையினும் காதலன்பே
மேம்படுதலின், இது காதல் மாட்சியெனப்படுகிறது. ஓட்டம் பிடிக்க வொண்ணாது என்பது பாட்டுத்
தோறும் பல்லவியாக நிற்கிறது. மேலும் இதன்கண், பெண்மைப் பண்புகள் நீங்குவதும் பசு கருவி
கரணங்கள் பதி கருவி கரணங்களாவதும் காதல் மாட்சி விளைவிக்கும் பயனாம் என அறிக.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம் 1718. திடனான் மறையார் திருஒற்றித்
தியாகர் அவர்தம் பவனிதனை
மடனா மகன்று காணவந்தால்
மலர்க்கை வளைக ளினைக்கவர்ந்து
படனா கணியர் நமைத்திரும்பிப்
பாரா தோடு கின்றார்நாம்
உடனா ஓடி னாலும்அவர்
ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
உரை: உறுதியமைந்த மறை நான்கு முடையவரும், திருவொற்றியூர்த் தியாகருமான சிவபெருமான் போந்தருளிய திருவுலாவை, அறியாமையின் நீங்கிக் கண்களாற் கண்டு மகிழ வந்தேமாக, படமுடைய பாம்பை அணியாகப் பூண்ட அவர், நம்முடைய கைவளைகளைக் கவர்ந்து கொண்டு நம்மைத் திரும்பியும் பாராமல் விரைந்து செல்லுகின்றார்; உடனே, அவர் பின்னே நாம் ஓடினாலும் அவரது ஓட்டம் நம்மாற் பிடிக்க வொண்ணாததாய் இருக்கிறது, காண். எ.று.
தோன்றிப் பல்லாயிர மாண்டுகளாகியும் நிலைபெறுவதால் நான்மறைகளைத் “திடன் நான்மறை” எனச் சிறப்பிக்கின்றார். மறைகட்கு முதல்வராதலால், “நான்மறையார்” என்று கூறுகிறாள். திருவொற்றியூரில் சிவனைத் தியாகர் என வழங்குவதால், “திருவொற்றித் தியாகர்” என வுரைக்கின்றார். தியாகரவர் என்பது, சாத்தனவன் வந்தான் என்றாற் போல்வது. பவனி - உலா. மடமையிருள் படிந்த மக்கட்குச் சிவனுண்மை தெளிந்து வழிபடும் உள்ளம் உண்டாகாதாகலின், “மடனாம் அகன்று காண வந்தால்” என்கிறாள். கண்டவட்கு உள்ளத்தில் காதல் மீதூர்ந்து உடம்பு நனி சுருங்க, கையிலிருந்த வளைகள் அவளை யறியாமல் கழன்று வீழ்ந்தனவாக, அவற்றைக் காட்சி தந்த தலைவன் கவர்ந்து சென்றான் எனப் பிறழ வுணர்ந்து “மலர்க்கை வளைகளினைக் கவர்ந்து” எனவும், கவர்ந்து கொண்டதுடன், வளையிழந்து பின் தொடர்ந்து ஓடிவரும் நம்மைத் திரும்பியும் பார்க்கின்றானில்லை என்பாளாய், “நமைத் திரும்பிப் பாரா தோடுகின்றார்” எனவும் இயம்புகிறாள். உடம்பு நனி சுருங்கின மெலிவாலும் பெண்மை யியல்பாலும் பின்னே நெடிது தொடர மாட்டாமையுற்ற பெருந்திணை நங்கை, உடன் வந்த மகளிரை நோக்கி, “உடனா வோடினாலு மவர் ஓட்டம் பிடிக்க வொண்ணாதே” என்று சொல்லுகிறாள்.
இதனால், வளைகவர்ந்த தியாகப் பெருமானைப் பின் தொடர்ந்து ஓடமாட்டாமையைப் பெருந்திணை நங்கை ஏனை மகளிரொடு சொல்லிக் கொண்டவாறாம். இதனை ஏனைப் பாட்டுகட்கும் கருத்தாகக் கூறிக் கொள்க. (1)
|