1719. தக்க வளஞ்சேர் ஒற்றியில்வாழ்
தம்பிரானார் பவனிதனைத்
துக்கம் அகன்று காணவந்தால்
துகிலைக் கவர்ந்து துணிவுகொண்டே
பக்க மருவும் நமைத்திரும்பிப்
பாரா தோடு கின்றார்நாம்
ஒக்க ஓடி னாலும்அவர்
ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
உரை: பொருந்திய வளம் கொண்ட திருவொற்றியூரில் எழுந்தருளும் தம்பிரானாகிய தியாகேசர் மேற்கொண்டு வரும் திருவுலாவை வருத்தம் நீங்கிக் காண வந்தேமாக, நாம் உடுத்த உடையை நெகிழ்வித்து மிக்க துணிவுடன் பக்கத்தே வரும் நம்மைத் திரும்பிப் பாராமலே விரைந்து போகின்றார்; ஒத்த விரைவுடன் பின்னே நாம் ஓடினாலும், அவரது ஓட்டம் பிடிக்க வொண்ணாததாய் இருக்கிறது காண். எ.று.
கடற்கரை யூராதலால் அதற்கேற்ப நெய்தல் வளம் நிறைந்திருக்குமாறு கண்டு, “தக்க வளஞ்சேர் ஒற்றி” எனக் கூறுகின்றாள். தம்பிரான் - தமக்குத் தாமே தலைவராயினார். சென்று காணாவாறு இடை நின்ற தடைகளால் உண்டான மனக்கவலைகளைப் போக்கிக்கொண்டு போந்தமையின், “துக்க மகன்று காண வந்தால்” என்று சொல்லுகிறாள். உடம்பு நனி சுருங்கியதால் இடையில் உடுத்த ஆடை நெகிழ்வது பற்றித் “துகிலைக் கவர்ந்து” என்றும், மகளிர் ஆடையைக் கவர்ந்தமைக்கு அஞ்சுதலின்றிச் செல்வது நினைந்து, “துணிவு கொண்டே” என்றும் இசைக்கின்றாள். ஆடை நெகிழ்ந்த நாம் என்னானோம் என்பதறிந்தற்கேனும் பார்க்காமற் போகின்றா ரென்பாளாய், “பக்க மருவும் நமைத் திரும்பிப் பாரா தோடுகின்றார்” என உரைக்கின்றாள். சேய்மையில் நில்லாமல் பக்கத்தே நிழல்போல் தொடர்ந்து வருகின்றோம் என்பது விளங்கப் “பக்கம் மருவும் நம்மை” என்றும், விரைந்து சேரற் கருத்துடன் போகின்றாரென்பாளாய், “திரும்பிப் பாரா தோடுகின்றார்” என்றும், அவர் செல்லும் வேகத்திலே நாமும் செல்கின்றோம் என்றற்கு “ஒக்க ஓடினாலும்” என்றும் இயம்புகின்றாள். (2)
|