பக்கம் எண் :

1726.

     தில்லை உடையார் திருஒற்றித்
          தியாகர் அவர்தம் பவனிதனைக்
     கல்லை உருக்கிக் காணவந்தால்
          கரணம் நமது கரந்திரவி
     பல்லை இறுத்தார் நமைத்திரும்பிப்
          பாரா தோடு கின்றார்நாம்
     ஒல்லை ஓடி னாலும்அவர்
          ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

உரை:

      தில்லைப் பதியை யுடையவரும், திருவொற்றியூரில எழுந்தருள்பவருமான தியாகப் பெருமானது திருவுலாவைக் கல்லொத்த மனமுடைய தாயர் உள்ளத்தை உருக்கி இசைவித்துக் காண வந்தேமாக, நமது கரணங்களைக் கவர்ந்து கொண்டு, சூரியனுடைய பல்லையுடைத்தவரான அவர், நம்மைத் திரும்பிப் பாராமலே விரைந்து போகின்றார்; நாம் அவர் பின்னே ஓடினாலும், அவரது ஓட்டம் பிடிக்க வொண்ணாததாயிருக்கிறது. எ.று.

     தில்லை நாயகர் என்றே சிவபெருமானை வழங்குப வாகலின், “தில்லை யுடையார்” என்று சிறப்பிக்கின்றாள். புறம் போக விடாது சிறை செய்யும் தாயர் மனம் கல்போல் உருகாமை நோக்கி, பல்வகை நயமொழிகளால் அவர்களின் உள்ளம் உருகுவித்து உலாக் காண இசைவு பெற்றமை புலப்பட, “கல்லை யுருக்கிக் காண வந்தால்” என்று உரைக்கின்றாள். அன்புடைய அடியராவார், “பசுகரணங்களெல்லாம் பதிகரணங்களாக வசி பெறும் அடியார்” (தணிகைப்புரா) என்றலின், கரணம் திரிந்த நங்கை, “கரணம் நமது கரந்து” எனக் கூறுகின்றாள். 'நமது கரணம் கரந்து' என மாறுக. காணும் கரணங்களெல்லாம் பேரின்பமெனப் பேணும் அடியார்” (பண்டாய) என மணிவாசகர் உரைப்பது காண்க. இதன்கண் பேரின்ப மென்றது பேரின்ப நுகர்வுக்குரிய கரணம் என்பதாம். கரணங்கள் மனம், சித்தம், அகங்காரம், புத்தி என்ற நான்குமாம். தக்கன் வேள்வியழித்த போது சூரியன் பல் தகர்க்கப்பட்டது. “சூரியனார் தொண்டை வாயினிற் பற்களை வாரி நெரித்தவாறுந் தீபற, மயங்கிற்று வேள்வி யென்றுந் தீபற” (திருவுந்தி) எனத் திருவாசகம் ஓதுவது காண்க. நமது பசுகரணத்தைப் பதிகரணமாக்கிய பெருமான் நம்மைப் பார்க்காமல் போவது நமக்கு ஆகாதென்று நினைக்கின்றாளாகலின் “நமைத் திரும்பிப் பாராது ஓடுகின்றார்” என்றும், நாம் எத்துணை விரைந்து தொடரினும் அவரது ஓட்டம் பிடிக்க வொண்ணாததாகிறது என்பாள், “ஒல்லை ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க வொண்ணாதே” என்றும் இயம்புகின்றாள்.

     (9)