பக்கம் எண் :

1729.

     மருகா வொற்றி வாணர்பலி
          வாங்க வகையுண் டேயென்றேன்
     ஒருகா லெடுத்தேன் காணென்றார்
          ஒருகா லெடுத்துக் காட்டுமென்றேன்
     வருகா விரிப்பொன் னம்பலத்துள்
          வந்தாற் காட்டு வேமென்றார்
     அருகா வியப்பா மென்னடியவ்
          வையர் மொழிந்த வருண்மொழியே.

உரை:

      மணம் கமழும் சோலைகளை யுடைய திருவொற்றியூர் வாழ்நராகிய தேவரே, யாம் இடும் பலி வாங்க கலவகை உளதோ என்று கேட்டேனாக, கை யுண்டோ என்றதாகக் கொண்டு ஒருகால் கையில் எடுத்தேன் என்று உரைத்தார்; ஒரு கால் என்று பொருள் கொண்டு ஒரு காலை எடுத்துக் காட்டு மென்றேனாக, நீர் பெருகி வருகின்ற காவிரி பாயும் பொன்னம்பலத்தின் உள்ளே வந்தால் காட்டுவேம் என்று கூறினார்; அது குறையாத வியப்பைத் தருகிறது. அத் தேவர் அருளிய மொழிப் பொருள் என்னையாம். எ.று

     மரு - நறுமணம், கா - பூஞ்சோலை. பலி யேற்றற்குரிய கலவகை உம்பால் உண்டோ என்பாளாய், “பலி வாங்க வகையுண்டே” என்று கேட்கின்றாள். வகை என்ற சொல்லிலுள்ள கை என்பதைக் கொண்டு கை யுண்டே என்றதாக மேற்கொண்டு, ஒரு கால் தாருக வனத்தில் கையிற் பலி யேற்றதை நினைப்பிக்குமாற்றால் “ஒருகால் எடுத்தேன்” என மொழிகின்றார். ஒரு கால் என்பதை எடுத்து, ஒரு காலில் பலி யெடுத்ததாகக் கருதி, “ஒருகால் எடுத்துக் காட்டும்” என நங்கை கேட்கின்றாள். தில்லையம்பலத்தில் ஒருகாலை எடுத்தாடியதைக் குறிப்பாராய், “வருகாவிரிப் பொன்னம்பலத்துள் வந்தால் காட்டுவோம்” என விடையிறுக்கின்றார். காவிரியின் கிளையாகிய கொள்ளிட நீரும் காவிரி நீராதலால் “வரு காவிரிப் பொன்னம்பலம்” என்று உரைக்கின்றார். அருகுதல் - குறைதல். இப்பாட்டுச் சில மாறுபாடுகளுடன் இங்கித மாலையில் (1818) காணப்படுகிறது.

     (2)