பக்கம் எண் :

1731.

     வேலை ஞாலம் புகழொற்றி
          விளங்குந் தேவர் நீரணியும்
     மாலை யாதென் றேனயன்மால்
          மாலை யகற்று மாலையென்றார்
     சோலை மலரன் றேயென்றேன்
          சோலை யேநாந் தொடுத்ததென்றார்
     ஆலு மிடையா யென்னடியவ்
          வையர் மொழிந்த வருண்மொழியே.

உரை:

      அசைகின்ற இடையை யுடைய தோழி, கடல் சூழ்ந்த நில வுலகத்தார் புகழ்கின்ற திருவொற்றியூரில் எழுந்தருளும் பிச்சைத் தேவரை நோக்கி, நீவிர் அணிந்து கொள்ளும் மாலை யாதாம் என வினவினேனாக, பிரமனுக்கும் திருமாலுக்கும் உண்டான மயக்கத்தை யகற்றும் மாலை என்று சொன்னார்; அந்த மாலை சோலைகளில் மலரும் பூமாலையல்லவே என்று கூறவே, நாம் தொடுத்தணிந் தணிவது தண்டலையாகிய சோலையே என்று உரைத்தார்; ஐயராகிய அவர் மொழிந்த அருள் மொழிக்குப் பொருள் என்னையோ. எ.று.

     ஆலுதல் - மேலும் கீழுமாக அசைதல். வேலை ஞாலம் - கடல் சூழ்ந்த நிலவுலகம். தேவர் - அண்மை விளி. ஒருகாலத்தே பிரமனும் திருமாலும் தாந்தாமே தலைவரெனப் பிணங்கியபோது, செத்த தேவர்களான பிரம நாரணர்களின் எலும்பை மாலையாகக் கோத்துச் சிவன் அணிந்து தமது தலைமை யியல்பைக் காட்டினார் என்று புராணம் கூறுதல் பற்றி, “அயன்மால் மாலை யகற்றும் மாலை” என்று தேவர் உரைக்கின்றார். மால் - மயக்கம். மாலை - என்பு மாலை. சோலைக்குத் தண்டலை என்றும் பெயருண்டு. தாம் அணிவது தேவர்களின் தலைகளைத் தொடுத்த தலைமாலை; அது தண்டலை - தண்ணிய தலைமாலை எனப் பொருள்படுதலால், “சோலையே நாம் தொடுத்தது” என்று சொல்லுகிறார். “பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும் போய், இருங்கடல் மூடி யிறக்கும் இறந்தான் களேபரமும், கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய், வருங்கடல் மீள - நின் றெம்மிறை வீணை வாசிக்குமே” (விருத்தம். தனி) எனத் திருநாவுக்கரசர் கூறுவது காண்க. இப்பாட்டு, சில வேறுபாடுகளுடன் இங்கித மாலையிற் (1819) காணப்படுகிறது.

     (4)