பக்கம் எண் :

1738.

     வான்றோய் பொழிற்சூ ழொற்றியுளீர்
          வருந்தா தணைவே னோவென்றேன்
     ஊன்றோ யுடற்கென் றார்தெரிய
          வுரைப்பீ ரென்றே னோவிதுதான்
     சான்றோ ருங்கண் மரபோர்ந்து
          தரித்த பெயர்க்குத் தகாதென்றார்
     ஆன்றோய் விடங்க ரென்னடியவ்
          வையர் மொழிந்த வருண்மொழியே.

உரை:

      வான் தோயும் பொழில் சூழ்ந்த திருவொற்றியூரில் உள்ள பிச்சைத் தேவரே! வருத்தமின்றி உம்மைச் சேர்வேனோ என்று கேட்டேனாக, ஊன் சுமந்த உன் உடம்பிற்கே வருத்தம் உளதாம் என்று மொழிந்தார்; மொழிப் பொருள் விளங்காமையின் யான் தெரிந்து கொள்ளுமாறு உரைத்தருள்க என்று வேண்டினேன்; இஃது, உமது இயல்புணர்ந்து உமக்குச் சான்றோர் இட்டுள்ள பெயர்க்கு ஒவ்வாது என உரைக்கின்றார்; எருதேறும் அழகராகிய அத்தேவர் மொழிந்த அருண்மொழிக்குப் பொருள்தான் என்னையோ. எ.று.

     உடலொடு கூடிய உயிர்க் குளதாகும் துன்பங்கள் உடலூழாய்க் கழிவனவாதலின், “வருத்தம் ஊன்றோய் உடற்கு” என்றுரைக்கின்றார். உடலின் நீங்கிய உயிர்க்குத் துன்ப இன்ப நுகர்ச்சிக்குரிய கருவி கரணங்கள் இல்லாமையால் “உடலுக்கே” எனப் பிரித்துக் கூறியதென அறிக. சான்றோர் மரபோர்ந்து தந்த பெயர் பேதை என்பது. “பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு” என அறநூல் கூறுதலால், உனக்கு உரைப்பது தகாது என்கின்றார். மரபு, இயல்பின் மேற்று. ஆன் தோய் விடங்கர் - எருதேறும் அழகர்.

     இப்பாட்டு, சில வேறுபாடுகளுடன் இங்கிதமாலையில் (1826) காணப்படுகிறது.

     (11)