பக்கம் எண் :

97. இன்ப மாலை

திருவொற்றியூர்

    அஃதாவது அருண் மொழி மாலையிற் கண்ட பிச்சைத் தேவரும் பிச்சையிடும் தேவரும் பிச்சையிடும் நங்கையும் நுகர்ச்சியின்பம் பொருளாக உரையாடுவதாம். இவர்கள் உரையாடலில் சொற்களைக் கவர் பொருள்படப் பேசுவதும் இன்பமாக இருக்கின்றன. சொல்லும் பொருளும் இன்பப் பொருளாக இருப்பதுபற்றி இஃது இன்ப மாலை எனப்படுகிறது. அருண்மொழி மாலையும் இன்பமாலை என்ற இரண்டும் வள்ளற் பெருமான் முதற்கண் பாடிப் பின்பு அவற்றில் சில வேறுபாடுகளைச் செய்து இங்கித மாலையிற் கோத்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர் நினைக்கின்றனர்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1759.

     ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநக
          ருள்ளா ருவந்தின் றுற்றனர்யான்
     என்றும் பெரியீர் நீர்வருதற்
          கென்ன நிமித்த மென்றுரைத்தேன்
     துன்றும் விசும்பே யென்றனர்நான்
          சூதா முமது சொல்லென்றேன்
     குன்றுங் குடமு மிடையுனது
          கொங்கை யெனவே கூறினரே.

உரை:

      பெரிய சிறப்புப் பொருந்திய திருவொற்றியூரில் உள்ளவராகிய பிச்சைத் தேவர் மகிழ்ச்சியுடன் இன்று என் மனைக்கு வந்தாராக. எக்காலத்தும் பெருமையுடையவராகிய நீவிர் இங்கு வருதற்கு என்ன காரணம் என வினாவினேன்; வானத்தில் படரும் மழையே என்று சொன்னார்; உமது சொல் சூதாக இருக்கிறது என்று சொல்லவே, குன்றுக்கும் குடத்துக்கும் ஒப்பாகும் உன்னுடைய கொங்கையே என்று கூறினார், காண். எ.று.

     பெருஞ்சீர் ஒன்று ஒற்றிநகர் என இயையும், உவப்பு - மகிழ்ச்சி. மக்கட்கு உண்டாகும் பெருமைபோல இறைவன் பெருமை கால வினைகளைச் சார்ந்த தன்மையின், “என்றும் பெரியீர்” என வுரைக்கின்றாள். நிமித்தம் - காரணம். மழை மேகம் வானத்திற் பரவுவதால் வந்தேம் என்பார், “விசும்பே” என்று கூறுகிறார். விசும்பு - மழை. “விசும்பிற் றுளிவீழி னல்லால் மற்றாங்கே பசும்புல் தலை காண்பரிது” (குறள்) என வருதல் அறிக. சூது - வஞ்சனை; மாங்கனியும் சூதாடுவார் கைக்கொண்டு ஆடும் காயுமாம். இடை - ஒப்புப் பொருட்டு. இப்பாட்டுச் சிலவேறுபாடுகளுடன் இங்கித மாலையிற் (1847) காணப்படுகிறது.

     (1)