பக்கம் எண் :

1760.

     கானார் சடையீ ரென்னிருக்கைக்
          கன்றும் பசுப்போற் கற்றதென்றேன்
     மானார் விழியாய் கற்றதுநின்
          மருங்குற் கலையு மென்றார்நீர்
     தானா ரென்றே னனிப்பள்ளித்
          தலைவ ரெனவே சாற்றினர்நான்
     ஆனா லொற்றி யிருமென்றே
          னங்கு மிருந்தே னென்றாரே.

உரை:

      மணம் கமழும் சடைய யுடைய பிச்சைத் தேவரே, என்னுடைய இரு கையிலும் உள்ள வளையும் பசுவைப் போற் கற்றது எனச் சொன்னேனாக, மான் போன்ற விழிகளை யுடையவளே, நினது இடையிலுள்ள கலையும் கற்றது என்று கூறினார். பின்பு, நீவிர் யாவர் என்று நான் கேட்டதும், யான் நனிபள்ளித் தலைவர் என்று சொன்னாராக அற்றாயின் நீர் சிறிது ஒற்றியிருப்பீர் என்று நான் சொன்னேன்; அங்கும் இருந்துளேன் என வுரைக்கின்றார். எ.று.

     கைக்கன்று - கையில் அணிந்திருக்கும் வளை. கற்றது - கன்று தலையுடையது; கன்றை யுடையது; கலைத்திறம் உடையது என்று மூன்று பொருள்படுவது. நாளடைவில் கைவளை தேய்வது என்ற கருத்தில் கைக்கன்றும் கற்றது என்றா ளென்றும், பசு கன்றை யுடையதால் பசுகற்றது என்றாள் என்றும் கொள்க. கலை - ஆடை. கலைத் திறம்பட நெய்யப்பட்டது உனது ஆடை யென்பாராய், “கற்றது நின் மருங்குற் கலையும் என்றார்” என்க. எஞ்சிய பகுதி இங்கித மாலையில் (1848) காணப்படுகிறது.

     (2)